இந்தியாவின் புகழ்மிக்க கதக் நடன கலைஞர்களில் மிக முக்கியமானவர் பண்டிட் பிர்ஜு மஹராஜ். ஆகச் சிறந்த நடன கலைஞரான பண்டிட் பிர்ஜு மஹராஜ் சிறந்த இசைக் கலைஞர் & தேர்ந்த பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக கலை உலகில் பல கலைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

திரையுலகிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்கள் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்னை காணாது நான் இன்று நானில்லையே” என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். இப்பாடலுக்காக பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் பாலிவுட்டில் பாஜிராவ் மஸ்தானி படத்திற்காகவும் சிறந்த நடன இயக்குனர் கானா தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்கள் நேற்றிரவு திடீரென காலமானார். நீண்ட காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த பண்டிட் பிர்ஜு மஹராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 83. இந்தியாவின் மிகச் சிறந்த நடன கலைஞரான பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் கலை மற்றும் திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விஸ்வரூபம் படப்பிடிப்பின் புகைப்படத்தை பகிர்ந்து, ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’ என பதிவிட்டுள்ளார்.