மலையாளத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் மெகா ஸ்டார் மம்முட்டி அவர்கள் திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள மம்மூட்டி இதுவரை 400 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த ஆண்டு(2021) வெளிவந்த தி ப்ரிஸ்ட் மற்றும் ஒன் புதிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் இயக்குனர் அமல் நீரத் பீஷ்ம பருவம்,  அறிமுக இயக்குனர் ரதீனா இயக்கத்தில் புழு மற்றும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி இயக்கத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை அடுத்து கிரைம் த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் மது இயக்கத்தில் தயாராகும் சிபிஐ 5 திரைப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து வருகிறார் நடிகர் மம்மூட்டி. இதனிடையே மலையாள நடிகர் மம்மூட்டி அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் மம்முட்டி விரைவில் குணமடைந்து வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

இதுகுறித்து நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், 

தேவையான அனைத்து பாதுகாப்புகளோடு இருந்தும் நேற்று (ஜனவரி 15) எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. லேசான காய்ச்சல் மட்டும் இருக்கிறது மற்றபடி நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே என்னை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். அனைத்து நேரங்களிலும் முக கவசம் அணியுங்கள். 

என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.