கனமழை எதிரொலியாக  சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி, விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இப்படியாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், முன் எப்போதும் இல்லாத வகையில் மிக அதிகபடியான மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நேற்று மிக அதிகபடியான கன மழை கொட்டித் தீர்த்தது. 

இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலன சாலைகள் யாவும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தன. முக்கியமாக, சென்னையின் முக்கிய சாலைகள் யாவும் பார்ப்பதற்கே வெள்ளக்காடக காட்சி அளித்தன. 

அத்துடன், சென்னை சாலைகளில் வடியாமல் தேங்கி நின்ற மழைநீரால், நேற்று முன் தினம் இரவு மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பலரும் கிட்டதட்ட 3 அல்லது 4 மணி நேரம் பயணம் செய்தே அவரவர் வீடுகளுக்கு செல்ல முடிந்தது.

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களிலும் பரவலாக மழை பெய்தது. 

அத்துடன், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்” என்றும், நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை” சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்திருக்கிறது.

அதன்படி, “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது என்றும்,  தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பருவமழை இயல்பை விட, தற்போது அதிகமாகவே பதிவாகி இருக்கிறது” என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

“அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் மீண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை பெய்து வருகிறது என்றும், இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்” வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதன் படி, “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம்,  திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஆகிய ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், தஞ்சாவூர் உள்ளிட்ட மேலே சொன்ன இந்த 9 மாவட்டங்களில் நிர்வாக ரீதியாக மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும்”  வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அந்த வகைியல், நாளை தினம் ஞாயிற்றுக் கிழமை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் நாளை மறுதினம் திங்கட் கிழமை தென் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்” என்றும், வானிலை மையம் கூறியுள்ளது.