தென்னிந்திய திரை உலகில் பிரபல இளம் கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை டிம்பிள் ஹயாத்தி தெலுங்கில் கல்ஃப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த தேவி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக உருவான கட்டல்லகொண்டா கணேஷ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அத்ரங்கி ரே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் டிம்பிள் ஹயாத்தி.

அடுத்ததாக நடிகர் விஷால் நடிப்பில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்தி, தெலுங்கில் நடிகர் ரவி தேஜா கதாநாயகனாக நடித்து வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீஸாக உள்ள கில்லாடி வரைபடத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் நடிகை டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நடிகை டிம்பிள் ஹயாத்தி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்து மீண்டுவர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

இதுகுறித்து நடிகை டிம்பிள் ஹயாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

அனைவருக்கும் வணக்கம், 
அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் எனக்கு நேற்று (ஜனவரி 15) கோவிட் 19 பாசிட்டிவ் ஆனது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கிறது மற்றபடி நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். 2 தடுப்பூசிகளும் எடுத்துக் கொண்டதால் எனக்கு அறிகுறிகள் லேசாக இருக்கிறது. அனைவரும் தயவுசெய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டு முக கவசங்களை அணிந்துகொண்டு, பாதுகாப்போடு இருங்கள். 
இன்னும் வலிமையோடு மீண்டு வருவேன் .

என தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.