“உக்ரைனில் மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை  ரஷ்யா வீசி வருவதாக” பீதியை கிளப்பும் புதிய புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.

ரஷியா - உக்ரைன் போர் 27 வது நாளாக நீடித்து வரும் நிலையில், “ரஷ்யா செய்வது போர் இல்லை, பயங்கராவதம்” என்று, புடினை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேற்றைய தினம் மிக கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் புதிய உச்சம் பெற்றிருக்கும் நிலையில், ரஷ்யா தனது மொத்த பலத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி, தொடர்ச்சியாக உக்ரைன் மீது மிக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த உச்சக்கட்ட போர் நடைபெறும் சூழலுக்கு மத்தியில் “நேரடியான பேச்சுவார்த்தை வர வேண்டும்” என்று, ரஷ்ய அதிபர் புதினை, மீண்டும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைத்திருந்தார். 

இதனால், “இருநாட்டு அதிபர்களும் சந்திக்காமல், இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைப்பது சாத்தியமில்லாதது” என்றும், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

ஆனால், “கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் வான் பரப்பில் ரஷ்யப்படை விமானங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளதாக” உக்ரைன் ராணுவம், தற்போது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.

குறிப்பாக, “மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா தொடர்சியாக வீசுவதாகவும்” உக்ரைன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.

அத்துடன், “மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை ரஷ்யா வீசுவது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகி” இருப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, “உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியு போல் நகரத்தை நோக்கி இந்த மாதிரியான குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும், இதனால் அந்த பகுதியில் தரையில் உள்ள புற்களும் கூட பற்றி எரிந்து வருவதாகவும்” அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

“இப்படியாக, மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகள், மற்ற குண்டுகளை விட மிக மிக ஆபத்தானவை” என்றும், விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். 

“இந்தக் குண்டுகள் வெடிக்கும் போது, ஒரு பெரிய தீப்பந்தத்தை உருவாக்கி சுற்றி உள்ள பகுதியில் ஆக்சிஜனை உறிஞ்சுகின்றன என்றும், இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் மனிதர்கள் ஆவியாகி விடுவார்கள்” என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி, பெரும் பீதியை கிளப்பி இருக்கின்றன.

மிக முக்கியமாக, “உக்ரைனில் ரசாயனம் மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகலாம்” என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிக கடுமையான எச்சரிக்கையை முன்னதாக வெளியிட்டு இருந்தார்.

அதே போல், “உக்ரைனின் எதிர் தாக்குதலால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், எங்கும் தப்பிக்க முடியாத மிக நெருக்கடியான சூழலில் சிக்கியிருப்பதாவும்” ஜோ பைடன் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “உக்ரைனில் இருந்து சுமார் 35 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளதாக” ஐநா கவலைத் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.