மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உள்ளது.
 
12 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் நகரில் வங்கதேசத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற 22 வது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி, இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ஷபாலி வர்மா ஜோடி களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி நல்ல தொடக்கம் தந்த நிலையில் ஷபாலி 42 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 42 ரன்களும் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தனர்.

குறிப்பாக, ஸ்மிருதி மந்தனா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக, சர்வதேச போட்டியில் 5 ஆயிரம் ரன்களை ஸ்மிருதி மந்தானா சேர்த்து அசத்தி உள்ளார். அந்த வகையில், இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ், டக் அவுட் ஆகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இதனால், இந்திய அணியானது வெறும் 4 பந்து இடை வெளியில் மொத்தம் 3 விக்கெட்டுகளை இழந்து அந்த நேரத்தில் தடுமாறிப்போனது.

அப்போது களமிறங்கிய யாஷ்திகா பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்து அசத்திய நிலையில், அவருடன் களத்தில் நின்ற பூஜா, நல்ல பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தாார். அதன் படி, அவரும் தனது பங்கிற்கு 30 ரன்கள் விளாசினார். பின்னர் வந்த ஸ்நே ரானா 27 ரன்கள் விளாசினார்.

இதனால், இந்திய அணியானது 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது. 

இதன் காரணமாக, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசத்துக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியால் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து வங்கதேச வீராங்கனைகள் ஆட்டமிழந்த தடுமாறிப்போனார்கள்.

அதன் படி, முதல் 35 ரன்கள் சேர்ப்பதற்குள் வங்கதேச அணி முதல் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து களத்தில் தடுமாறி நின்றது. 

அதாவது, தொடக்க வீராங்கனைகளில் மூர்ஷிடா கட்டூன் 19 ரன்னும், ஷார்மின் அக்தர் 5 ரன்களிலும் அவுட்டான நிலையில், அந்த அணியின் கேப்டன் நிகர் உள்பட அடுத்தடுத்து வந்த 3 வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

பின்னர் வந்த சல்மா 30 ரன்களும், லதா 24 ரன்களும் சேர்த்த நிலையில், 40.3 ஓவர்களில் வங்கதேச அணியானது வெறும் 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி வாஷ் அவுட்டானது.

இதன் மூலமாக, இந்திய அணியானது 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று, புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 3 வது இடத்தில் நீடிக்கிறது. 

அதன் படி, இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப் பிரிக்காவை வீழ்த்தினால், அரை இறுதி வாய்ப்பு உறுதியாகி விடும் என்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணி வரும் 27 ஆம் தேதி தென்னாப் பிரிக்கா உடனான அடுத்த போட்டியில் மோத இருப்பதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.