உக்ரைன் லிவிட் நகரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வந்துள்ளது.

ukraine war

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து  நேற்று முன்தினம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் சிறப்பு மீட்பு விமானம் மாலையில் மும்பை வந்து சேர்ந்தது. இவ்வாறு 4 விமானங்கள் மூலமாக இதுவரை 21 தமிழக மாணவர்கள் உள்பட 907 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில் அவர்களையும் மீட்கும் விதமாக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 5 விமானங்கள் புகாரெஸ்டுக்கும், 2 விமானங்கள் புடாபெஸ்டுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து இதுவரை 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். 

மேலும் உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டு உள்ளதால் ஹங்கேரி, போலந்து, ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்தவாறே இந்த மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 4 மத்திய மந்திரிகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில் ஹர்தீப் சிங் புரி ஹங்கேரிக்கும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவுக்கும், கிரண் ரெஜிஜூ சுலோவாகியாவுக்கும், வி.கே.சிங் போலந்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் லிவிங் நகரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் உடனடியாக  அவர்  ஆம்புலன்ஸ் மூலம் கீவ் நகர மருத்துவமனையில் அனுமதித்ததாக இளைஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து வந்த மாணவர் சுடப்பட்டதால் பாதியிலேயே திரும்ப அழைத்து செல்லப்பட்டதாக தகவல்  வந்துள்ளதாக  மத்திய மந்திரி வி.கே.சிங்  கூறியுள்ளார்.  குறைந்த பாதிப்புடன் இந்தியர்களை அழைத்துவர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக  மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.