ஆரம்பத்தில் தனது நடனத்தால் மக்களின் மனதை கவர்ந்த ராகவா லாரன்ஸ் தொடர்ந்து நடிகர் & இயக்குனர் என பல என்ட்ர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது FiveStar கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே ராகவா லாரன்ஸின் சூப்பர் ஹிட் திரைப்படங்களான முனி - காஞ்சனா சீரிஸ் வரிசையில் அடுத்ததாக தயாரகவுள்ளது துர்கா. 

ராகவா லாரன்ஸின் ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் துர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. கபாலி, கே ஜி எஃப், கைதி உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் இயக்குனர்களாக கவனம் ஈர்த்த, முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக திகழும் இரட்டை சகோதரர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் துர்கா படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், விக்ரம் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ள அன்பறிவு மாஸ்டர்ஸ் அடுத்தடுத்து பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற உள்ளனர். இந்நிலையில் அன்பறிவு மாஸ்டர்ஸ் இருவரும் ராகவா லாரன்ஸின் துர்கா திரைப்படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளனர். 

இதுகுறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில், “இயக்குனர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு தான் திரை உலகிற்குள் வந்தோம். காலம் ஒரு கட்டத்தில் எங்களை ஸ்டண்ட் மேன் ஆக மாற்ற தற்போது ஸ்டண்ட் இயக்குனர்களாக இருக்கிறோம். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் அவரது தயாரிப்பில் எங்களுக்கு துர்கா படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். நாங்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோம். ஆனால் தற்போது முன்னதாக ஒப்புக்கொண்ட ஸ்டண்ட் இயக்கத்திற்கான பணிகளின் காரணமாக இந்த அற்புதமான வாய்ப்பை விட்டு விலகுகிறோம் என கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது இந்த நிலைமையை புரிந்து கொண்ட ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு நன்றி. நாங்கள் படத்தை இயக்கவில்லை என்றாலும் படத்தின் ஒரு அங்கமாக துர்கா படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக எங்களது சிறப்பான பங்களிப்பை அளிப்போம்" என தெரிவித்துள்ளனர். 

எனவே துர்கா திரைப்படத்தையும் இயக்குனராக ராகவா லாரன்ஸே இயக்குகிறாரா அல்லது வேறு இயக்குனர்கள் இயக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.