தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் படி, அமைச்சர்கள் செங்கோல் வழங்க, சென்னையின் இளம் வயது மேயர் பிரியா ராஜன், சற்று முன்னதாக பதவியேற்றார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது, 

இந்த மறைமுக தேர்தலில், சென்னை மேயராக ரிப்பன் மாளிகையில் பிரியா ராஜன் என்கிற ஆர்.பிரியா என்ற இளம் வயது பெண் முதன் முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை மேயர் பிரியா ராஜனுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் மேயருக்கான செங்கோலை பிரியாவிடம் வழங்கினர். 

அத்துடன், சற்று முன்னதாக மேயராக பொறுபேற்ற பிரியா ராஜனுக்கு, அந்த மேயருக்கான அங்கியை சென்னை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வழங்கினார்.

இவருடன், சென்னையின் துணை மேயராக மு.மகேஷ் குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து, சென்னை அடுத்த ஆவடி மாநகராட்சி மேயராக ஜி.உதயகுமாரும், தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி கமலக்கண்ணனும், துணை மேயராக ஜி.காமராஜ் ஆகியோர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதே போல், மதுரை மாநகராட்சியில் திமுக மேயர் வேட்பாளரான இந்திராணி பொன்.வசந்த், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகனும், துணை மேயராக திவ்யா தனக்கோடியும் பதவி ஏற்றனர். 

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணனும், துணை மேயராக கே.ஆர்.ராஜூ ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

கோவை மாநகராட்சி மேயராக கல்பனாவும், துணை மேயராக இரா.வெற்றிச்செல்வனும் பதவி ஏற்றனர். 

சேலம் மாநகராட்சி மேயராக ஏ.ராமச்சந்திரனும், திருப்பூர் மாநகராட்சி மேயராக தினேஷ் குமாரும், ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினமும் பதவி ஏற்றுக்கொண்டனர். 

அதே போல், தூத்துக்குடி மாநகராட்சி மேயராக என்.பி.ஜெகன் என்பவரும், துணை மேயராக ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். 

மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி யுவராஜ் என்பவரும், வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா அனந்தகுமாரும் பதவி ஏற்றனர். 

கடலூர் மாநகராட்சி மேயராக சுந்தரியும், தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக சண்.ராமநாதனும், துணை மேயராக அஞ்சுகம் பூபதியும் பதவி ஏற்றனர்.

அத்துடன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயராக தமிழழகன் பதவி ஏற்றார். 

கரூர் மாநகராட்சி மேயராக கவிதா கணேசனும், துணை மேயராக தாரணி பி.சரவணன் ஆகியோர் பதவி ஏற்றனர்.

ஒசூர் மாநகராட்சி மேயராக எஸ்.ஏ.சத்யா, துணை மேயராக சி. ஆனந்தையா ஆகியோர் பதவி ஏற்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி மேயராக இளமதி, துணை மேயராக ராஜப்பா பதவி ஏற்றனர். 

சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா இன்பம், துணை மேயராக விக்னேஷ் பிரியா ஆகியோர் பதவி ஏற்றனர். 

இப்படியாக, தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றிய நிலையில்.  வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இந்த நிலையில் தான், மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், தமிழகத்தின் 21 மாநகராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.