தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் வெற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த தொடர் திரைப்படமான ஜீவி திரைப்படத்திற்கு பிறகு பிரபல நடிகராக வளர்ந்தார்.

தொடர்ந்து C/O காதல் படத்தில் நடித்த வெற்றி நடிப்பில் மீண்டும் த்ரில்லர் படமாக கடைசியாக கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் வனம். இதனையடுத்து வெற்றி நடிப்பில் மெமரிஸ் மற்றும் ரெட் சாண்டல் ஆகிய த்ரில்லர் திரைப்படங்கள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து ஜோதி, கண்ணகி மற்றும் பம்பர் என வெற்றி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக இயக்குனர் VJ கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான த்ரில்லர் படமான ஜீவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

சமீபத்தில் சிலம்பரசன் TR நடித்து வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படமான மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் ஜீவி 2 படத்தை தயாரிக்க, இயக்குனர் VJ.கோபிநாத் எழுதி இயக்குகிறார். வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.