“உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்திருக்கும் ரஷ்ய படையினர் உடனடியாக திரும்பி செல்லாவிட்டால், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள்” என்று, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவது, உலக நாடுகள் இடையே, கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி அதி காலை 4.50 மணி அளவில் அதிகாரப்பூர்வமான போரை தொடங்கியது. எனினும், இன்று வரை இடைவிடாமல் போர் தொடர்ந்து 8 வது நாளாக நடைபெற்று வருவதால், உக்ரைன் நாட்டில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர். 

அதே நேரத்தில், ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக முன்னேறி வருகின்றன. 

இதனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்பேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு காரம் நீட்டி உள்ளன.

முக்கியமாக, “உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று, ஐக்கிய நாடுகள் பொது சபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவு” தெரிவித்த உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, “சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக” ரஷ்யா, தற்போது அறிவித்து உள்ளது.

அத்துடன், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இதில் சுமூக முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்பதால், உக்ரைன் போர் இன்னும் தீவிரமாகும் சூழல் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், “உக்ரைன் - ரஷ்யா இடையேயான இந்த போரில், இதுவரை 9 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக” உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், “உக்ரைனுக்குள் நுழைந்திருக்கும் ரஷ்ய படையினர், உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் எங்கு சென்றாலும், அவர்கள் அழிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசி உள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி, அந்நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “உக்ரைனின் பல பகுதிகளுக்கு ரஷ்ய படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்” என்று, அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

“ஆனால், ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்றும், அதற்கு காரணம் தாய்நாட்டை காப்பதற்காக லட்சக்கணக்கான உக்ரைன் நாட்டு மக்கள், நமது ராணுவத்தினருடன் இணைந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்” என்றும், அவர் பெருமிதத்தோடு தெரிவித்து உள்ளார்.

மேலும், “நமது நாட்டு மக்களின் எழுச்சியை ரஷ்ய ராணுவ வீரர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும், உக்ரேனியர்களின் வீரத்தை பார்த்து ரஷ்ய படையினர் பல இடங்களில் இருந்து பின்வாங்கி வருவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “இது போன்ற பகுதிகளில், ரஷ்ய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்து உள்ளனர் என்றும், அவர்களிடம் ஏன் உக்ரைனுக்குள் வந்தீர்கள் எனக் கேட்டால், எங்களுக்கு தெரியாது என்றே அவர்கள் கூறுகிறார்கள்” என்பதையும் மறக்காமல் சுட்டிக்காட்டி உள்ளார். 

“குறிக்கோள் இன்றி, உக்ரைனுக்குள் ஊடுருவியிருக்கும் ரஷ்ய வீரர்களால் என்ன சாதித்துவிட முடியும்?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

குறிப்பாக, “ஒரு வாரத்தில் 9 ஆயிரம் ரஷ்ய வீரர்களை கொன்றதன் மூலம், ரஷ்ய படைகளுக்கு பாடம் புகட்டப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், உக்ரைனை விட்டு அவர்கள் உடனடியாக வெளியேறி செல்லாவிட்டால், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள்” என்றும், செலன்ஸ்கி பகிகரங்கமாக எச்சரிக்கை விடுத்து உள்ளார்.