மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆங் சான் சூகி அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார். 

உலக அளவில் பெரும் அச்சமாக நிலவி வரும் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 

அப்போது, ஆங் சான் சூகி மீதான அதிருப்தி மற்றும் கொரோனா அச்சம் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவில், மிக குறைவான வாக்குகளே இந்த முறை பதிவாகி இருந்தன. 

அத்துடன், தேர்தல் முடிவுகள் முறையாக வெளியாகும் முன்பே, ஆளும் தேசிய ஜனநாயக கட்சியானது 83 சதவீத இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றதாக அப்போது அறிவித்தது. 

அதன் பிறகு, தேர்தல் ஆணையமும் இதனை உறுதி செய்தது. அதே நேரத்தில், மியான்மர் ராணுவமானது, “இந்த தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டின. அதன் தொடர்ச்சியாக, இந்த தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த ராணுவம், அது தொடர்பான கருத்துக்களில் உறுதியுடன் இருந்தது. 

அதே போல், ராணுவத்தின் இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறி, தேர்தல் ஆணையம் அதனைத் தொடர்ந்து நிராகரித்து வந்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முதல் முறையாக நேற்று நாடாளுமன்றம் கூட இருந்தது. இந்த கூட்டத் தொடரில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று முற்றிலுமாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், மியான்மரில் நேற்றைய தினம் திடீரென்று ராணுவப் புரட்சி வெடித்தது. 

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை ராணுவம் அதிரடியாகக் கைது செய்தது.

அத்துடன், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 417 ன் கீழ் ஆட்சியை ராணுவம் தற்போது கைப்பற்றியதாகவும், ராணுவத்துக்குச் சொந்தமான மியாவாடி தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பானது வெளியானது. இதனைப் பார்த்த அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும், “அந்நாட்டில், நாட்டின் பாதுகாப்பு தன்மையைப் பாதுகாக்க ஒரு வருட காலத்துக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும்” அந்நாட்டின் ராணுவம் அறிவித்து உள்ளது. 

மியான்மர் நாட்டின் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹியாங் என்பவரே, நாட்டின் தலைவராக இருப்பார் என்றும், துணை அதிபர் மைன்ட் ஸ்வே அதிபராக பொறுப்பு உயர்த்தப்படும் என்றும் ராணுவம் தற்போது அறிவித்துள்ளது.‌ 

அதே போல், ஒரு வருடத்துக்குள் மியான்மரில் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றிபெறும் நபரிடம் அதிகாரம் முழுவதுமாக ஒப்படைக்கப்படும் என்றும், அந்நாட்டின் ராணுவம் உறுதி அளித்து உள்ளது.

இதனிடையே, மியான்மரில் திடீர் ராணுவ புரட்சி காரணமாக, மியான்மர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அந்நாட்டின் நாட்டின் தலைநகர் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள், தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால், அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

மியான்மரில் திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டு, அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை அமைத்து, அந்நாட்டின் அதிபர் ஆங் சான் சூகி அதிரடி கைது செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அதே நேரத்தில், மியான்மரில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாகக் கவனிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.