இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் சேர்ந்து இந்தியாவில் நிலவும் இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களை காப்பாற்றுவதற்காக பொது நிதி திரட்டுவதில் ஈடுபட்டுள்ளார்கள். 

தினசரி இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் மேல் சென்றுவிட்டது. தடுப்பூசிகள் வந்தாலும்  வைரஸை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் வைரஸின் வீரியம் அதிகமாக இருப்பதால் அதிகமான நோயாளிகள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்நிலையில் இந்தியாவில் இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒரு பொது நிதி திரட்டலில் ஈடுபட்டிருக்கிறார், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. KETTO என பெயரிடப்பட்டுள்ள அந்த பொது நிதி திரட்டும்  அமைப்பு மூலம் நிதி திரட்டி கஷ்டப்படும் மக்களுக்கு கை கொடுப்போம் வாருங்கள் என விராட்கோலி அழைப்பு விடுத்திருக்கிறார்.  

விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து பேசி வீடியோவாக பதிவு செய்து அதை டுவிட்டரில் வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார். கிரிக்கெட்டில் ரன்கள் சேர்த்த கோலி பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி  சேர்க்க இறங்கியதால் இந்தியா முழுவதும்  கேப்டன் கோலியை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.