யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் படங்களை தொடர்ந்து இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவான படம் காட்டேரி. வித்தியாசமான திகில் படமாக தயாராகி வரும் இப்படத்தை ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.  பிரசாத் இசையமைத்துள்ளார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். செந்தில் ராகவன் கலை இயக்க பணிகள் செய்துள்ளார். 

இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால், ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், எதுவும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. இறுதியாக, திரையரங்க வெளியீட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டது காட்டேரி திரைப்படம். 

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக காட்டேரி வெளியாகும் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தது. கப்பல் படத்திற்கு பிறகு வைபவ் உடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் சோனம் பாஜ்வா. மேலும் படத்தில் கருணாகரன், வரலக்ஷ்மி சரத்குமார், பொன்னம்பலம், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்ற ஆவலில் உள்ளனர் ஹாரர் பட விரும்பிகள். 

படத்தின் இரண்டாம் ட்ரைலர் காட்சி சமீபத்தில் வெளியானது. மர்மம் நிறைந்த ஊரில் மாட்டுக்கொள்ளும் வெளியூர் நபர்கள் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறார்கள் என்பதே கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இயக்குனர் வெங்கட் பிரபு இதை வெளியிட்டுள்ளார். திகில் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த ஸ்னீக் பீக் காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.