ஒருபுறம் சினிமா - தயாரிப்பு - நடிப்பு, மறுபுறம் அரசியல் - சட்ட மன்ற உறுப்பினர் - மக்கள் பணி என இடைவிடாது செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராகி உள்ள திரைப்படம் கலகத் தலைவன். இயக்குனர் மகள் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கழகத் தலைவன் திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் உடன் சிறப்பு நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த பேட்டியில், உங்களது திரைப்படங்கள் குறித்து தமிழக முதல்வரும் உங்களது தந்தையுமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன சொல்வார்..? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவர் எல்லா திரைப்படங்களையும் பார்த்து விடுவார்.. ரிலீசுக்கு முன்பே காப்பி ரெடி ஆனதும் அவருக்கு போட்டு காட்டி விடுவேன். நன்றாக இருந்தால் நன்றாக இருந்தது என்று சொல்வார்கள். ரொம்ப நன்றாக இருந்தாலும் சொல்வார்கள். நன்றாக இல்லை என்றால் எதுவுமே சொல்லாமல் சென்று விடுவார்…” என பதிலளித்தார்.

எந்த மாதிரி திரைப்படங்கள் செய்ய வேண்டும் என்று ஏதாவது அறிவுரை கூறியிருக்கிறாரா..? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “அப்படி ஏதும் அறிவுரைகள் எல்லாம் செய்தது கிடையாது. இந்த மாதிரி படம் செய்ய வேண்டும் அந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று என்றெல்லாம் எதுவும் சொன்னது கிடையாது. நான் நல்ல படம் எடுத்து விட்டால் நானே பெருமையாக எடுத்து சென்று இந்த படம் பாருங்கள் என்று சொல்வேன். உங்களுக்கு பிடிக்கும் என சொல்வேன். நெஞ்சுக்கு நீதி எல்லாம் அவருக்கு மிகவும் பிடித்த படம் தாத்தாவின் டைட்டில் சமூக நீதிப் பேசிய படம் அதையெல்லாம் போட்டு காட்டும் பொழுது எனக்கு பெருமையாக இருக்கும் கலகத் தலைவன் இன்னும் அப்பா பார்க்கவில்லை. காப்பி ரெடி ஆகவில்லை. இப்போது தான் சென்சார் முடிந்திருக்கிறது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்குள் அப்பா பார்ப்பாங்க…” என பதிலளித்தார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பகிர்ந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலினின் முழு பேட்டி இதோ…