காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் அதிதி. 

அதிதி ராவ் நடிப்பில் மலையாள திரைப்படமான சுஃபியும் சுஜாதாயும் திரைப்படம் வெளியாகியது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் ஜூலை 3-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது. லாக்டவுன் சீசனில் ஓடிடி-ல் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விஜய் பாபு தயாரிப்பில் நரணிபுழா ஷானவாஸ் இயக்கிய இந்த படத்தில் ஜெயசூர்யா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயச்சந்திரன் இசையமைத்திருந்தார். அணு மூதேதத் ஒளிப்பதிவு செய்தார். தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர் படக்குழுவினர். 

அதிதி ராவ் நடிப்பில் துக்ளக் தர்பார் படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி டேபிளுக்கு முன் அமர்ந்திருப்பது போலவும், அந்த டேபிளில் தெரியும் பிரதிபலிப்பு வேறொரு விஜய் சேதுபதி போல காட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இதுதவிர்த்து பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சினாமிகா படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் அதிதி. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். காஜல் அகர்வாலும் படத்தில் உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார்.