ஆண் கைதிகளுக்கு சவால் விடும் வகையில், பெண் கைதி தப்பி ஓடிய நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதான கிருஷ்ணவேணி, தன்னை காதலித்து ஏமாற்றியதாகக் கூறப்படும் தனது முதல் காதலனைக் கொலை செய்து விட்டு, தலைமறைவானார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காதலித்து ஏமாற்றியதால், பல ஆண்டுகள் வஞ்சத்தோடு இருந்த கிருஷ்ணவேணி, தன் முதல் காதலனைத் திட்டமிட்டு கொலை செய்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தலைமறைவாக இருக்கும் கிருஷ்ணவேணியை, தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, கிருஷ்ணவேணி திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற ஆரணி நகர தனிப்படை போலீசார், குண்டர் சட்டத்தின் கீழ், கிருஷ்ணவேணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, கிருஷ்ணவேணி விசாரணைக் கைதியாக வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கிருஷ்ணவேணி அப்போது கர்ப்பிணியாக இருந்தார். 

கிருஷ்ணவேணி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக அடுக்கம் பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சையில் இருந்த கிருஷ்ணவேணி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலேயே, தனக்கு சிறையில் வழங்கப்பட்ட புடவையை மாற்றிக்கொண்டு, சாதரான புடவை அணிந்து, மருத்துவமனையில் இருந்து மிக எளிதாகத் தப்பிச் சென்று உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறை துறைக் காவல் துறையினர், தப்பியோடிய விசாரணைக் கைதி கிருஷ்ணவேணியை தீவிரமாகத் தேடி வந்தனர்.

மேலும், இது குறித்து வேலூர் வட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணவேணியைப் பிடிக்க வேலூர் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிருஷ்ணவேணியை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கிருஷ்ணவேணி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அந்த குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், கிருஷ்ணவேணியை அதிரடியாக மீண்டும் கைது செய்து, தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனிச் சிறையில் அடைத்தனர்.

அத்துடன், “ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள இந்த தருணத்தில், கிருஷ்ணவேணி எப்படி ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டமான திருவள்ளூருக்கு தப்பிச் சென்றார்? அவருக்கு யார் உதவி செய்தார்கள்? அவருக்கு மருத்துவமனையில் மாற்றுப் புடவை வழங்கியது யார்?” என்று பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஆண் கைதிகளுக்கு சவால் விடும் வகையில், பெண் கைதி தப்பி ஓடிய நிலையில், அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.