கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. அந்தவகையில் ஒவ்வொரு நாளும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துக் கொண்டே இருக்கிறது. 

கடந்த 24 மணிநேரத்தில் 28,701 புதிய நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக அதிகாரபூவமாக சொல்லப்பட்டுள்ளது. இதுவரை உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் பட்டியலில், 24 மணி நேர இடைவெளிக்குள் இத்தனை நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டது இதுவே முதன்முறை. இப்போது, இந்தியாவில் உறுதிசெய்யப்பட்ட மொத்த நோயாளிகள் எண்ணிக்கை, 879,466. இறப்பு எண்ணிக்கையும் கடந்த சில நாள்களாகவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 23,187. அதிக இறப்பு ஏற்பட்ட மாநிலங்களில், 7,827 இறப்பு என்ற எண்ணிக்கையுடன் மகாராஷ்ட்ரா முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக இறப்புகள் ஏற்பட்டது, டெல்லியில். 1,573 இறப்புகள், அங்கு பதிவாகியிருக்கிறது. கர்நாடகாவில், அதிக நோயாளிகள் தொடர்ச்சியாக பதிவாகிவருவதாக, மற்றொரு தரவு சொல்கிறது.

இந்தியா மட்டுமல்ல, உலகளவிலும் 24 மணி நேரத்தில் அதிக நோயாளிகள் பதிவானது நேற்றைய தினம்தான். அப்படி நேற்று மட்டும் 2,30,000 - த்து சொச்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டிருப்பதாக சொல்லியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம். இதுவரை உலக அளவில் 13,041,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் 7,320,900 பேருக்கு தொற்று குணமாகி, அவர்கள் வீடு திரும்பியிருக்கிறார்கள். அதேபோல 562,011 பேர் இறந்திருக்கிறார்கள்.

இந்தியாவை விடவும், மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அங்கு, ஒரே நாளில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. 3,413,936 நோயாளிகள், 137,782 இறப்புகள் என அமெரிக்காவே கொரோனாவால் ஸ்தம்பித்து கிடக்கிறது.

சரி, இந்தியாவின் விஷயத்துக்கு வருவோம். இங்கு நேற்று மட்டும் 28,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதை தொடர்ந்து, பரிசோதனை எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதென அறிவித்துள்ளது ஐசிஎம்ஆர்

நாடு முழுவதும் ஜூலை 11 வரையில் மொத்தம் 1,15,87,153 கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். கூறியிருக்கிறது.

அதேபோல் நாடு முழுவதும் ஜூலை 11 வரை மட்டும் 2,80,151 கொரோனாவுக்கான மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் ஜூலை 11 வரை மொத்தம் 15,66,917 மாதிரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் நாள்தோறும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அரசாங்கம், ஒரே நாளில் 50,000 ஆன்டிஜென் பரிசோதனையை குஜராத்தில் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார்.

மருத்துவர்களும், பரிசோதனைகளை அதிகரித்து, பல நோயாளிகளை கண்டறிவது மட்டுமே, இந்தியாவின் உடனடி தேவை எனக் கூறி வருகிறார்கள். அதிக நோயாளிகளை கண்டறிந்து, அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தினால் மட்டுமே சூழல் அனைத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்கிறார்கள் அவர்கள். இந்தியாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளின் பட்டியலில் இருக்குமென கூறப்பட்ட நம் சென்னை மாநகரம்கூட, கடந்த சில தினங்களாக, புதிய நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதை காணமுடிகிறது. சென்னையின் பொல அனைத்து இடங்களிலும் இப்படி எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதே இப்போதைக்கு அனைவரின் ஆசையாகவும் இருக்கிறது. சென்னையை மக்களை போலவே, அனைத்து பகுதி மக்களும் விழிப்புஉணர்வோடு இருப்பது இதில் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

- ஜெ.நிவேதா.