டிக்டாக்கால் அடிமையான கணவர் ஒருவர், தன் மனைவி மற்றும் குழந்தையைக் கைவிட்டு விட்டு, வில்லுப்பாட்டு பாடும் பெண்ணோடு குடும்பம் நடத்தச் சென்ற சம்பவம், செத்தும் கெடுத்த டிக்டாக் என்ற வாசகத்துடன், இணையத்தில் வைரலாகி வருகிறது.

செத்தும் கெடுத்தான் என்ற பழமொழி, எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தற்போது டிக்டாக்கிற்க பொருத்தமாக இருக்கிறது என்றே சொல்லலாம். டிக்டாக் செயல்பாட்டில் இருக்கும்போது, அதனால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். இதனால், டிக்டாக்கை கண்டிப்பாக, தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

இதனிடையே, இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சனை காரணமாக எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்தது. இதன் காரணமாக, சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு இந்தியா அதிரடியாகத் தடை விதித்தது. அதில் பிரபலமாக இருந்த டிக்டாக்கும் ஒன்று. அப்படி, டிக்டாக் தடை செய்யப்பட்டாலும், செத்தும் கெடுத்தான் டிக்டாக் என்ற பழ மொழிக்கு பொருந்தும் வகையில், டிக்டாக்கால் அடிமையான கணவர் ஒருவர், தன் மனைவி மற்றும் குழந்தையைக் கைவிட்டு விட்டு, டிக்டாக் மூலம் பிரபலமான வில்லுப்பாட்டு பாடும் பெண்ணோடு குடும்பம் நடத்தச் சென்ற கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த வீரவநல்லூரை பூர்விகமா கொண்ட ஜாய்ஸி என்ற இளம் பெண், தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி அங்கேயே வசித்து வந்தார்.

அப்போது, தனது உறவுக்காரரான சுப்புராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ஜாய்ஸி, தனது பூர்விகமான நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் வந்து செட்டில் ஆகி உள்ளார். சுப்புராஜ் - ஜாய்ஸி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இதனிடையே, வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்த சுப்புராஜ், வேலைக்குச் செல்லாமல் டிக்டாக்கில் அடிமையாக இருந்து வந்தார்.

அந்த நேரத்தில், தனது மகளைப் பள்ளிக்கு விடுவதற்குச் செல்லும் போது, தனது மகளின் தோழியின் தாயார் வில்லுப்பாட்டு பாடி டிக்டாக்கில் மிகவும் 

பிரபலமான பிரேமா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஆகி உள்ளார். அப்போது, பிரேமா தன் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருவதைக் கூறி, சுப்புராஜுயிடம் ஆறுதல் அடைந்துள்ளார்.

இதனையடுத்து, சுப்புராஜ் - பிரேமா இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவரும் தங்களது டிக்டாக் வீடியோவை பரிமாறி உள்ளனர். 

இதில், பிரேமாவின் டிக்டாக் வீடியோவில் காண்ட ஆட்டம் பாட்டத்தில் சொக்கிப் போன சுப்புராஜ், தன் மனைவி மற்றும் குழந்தைகளை மறந்த, பிரேமா புராணம் பாட ஆரம்பித்துள்ளார்.

குறிப்பாக, சுப்புராஜ் - பிரேமா இருவருமே, தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் விட்டு விட்டு, அதன் பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஊர் சுற்றி உல்லாச வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

மேலும், சுப்புராஜ் - பிரேமா இருவருக்கும் டிக்டாக்கில் தனித்தனியாக ஐடி இருக்கும் நிலையில், இருவரும் ஒரே ஐடியில் ஒன்றாக இருப்பது போல், வீடியோ வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

அத்துடன், தமிழ் படிக்கத் தெரியாத மனைவி ஜாய்ஸிக்கு, பிறந்தநாள் பரிசு வாங்கித் தருவதாகக் கூறி, அவர் பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு நயவஞ்சகமாக மாற்றி உள்ளார்.

அதன் பிறகு, தன் மனைவி மற்றும் குழந்தைகளை கை விட்டுவிட்ட, வில்லுப்பாட்டு பாடகி பிரேமாவுடன் குடும்பம் நடத்தச் சென்றதாகத் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த ஜாய்ஸி, தன் பெற்றோரிடம் இது குறித்துக் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் ஊரில் விசாரித்துள்ளனர். அப்போது, கணவர் சுப்புராஜ், தனது கள்ளக் காதலி உடன் கன்னியாகுமரி மாவட்டம் வல்லம் பகுதியில் குடும்பம் நடத்தி வருவது தெரிய வந்தது.

இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த ஜாய்ஸி, அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், ஊரடங்கைக் காரணம் காட்டி, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாவட்ட எஸ்.பி.யை நேரில் சந்தித்து புகார் அளித்த நிலையில், அவர் உத்தரவின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில், வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளர் மாற்றலாகிச் சென்று விட்டதால், இந்த வழக்கை நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்வதாக  சுப்புராஜ் தரப்பில், போலீசார் தெரிவித்ததாக அவர்கள் கூறி உள்ளனர். இதனால், இந்த வழக்கு மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் ஜாய்ஸி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.