மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரை பாம்பு கடித்ததால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் பாம்பைப் பிடித்து இருமுறை கடித்த விநோத சம்பவம் வைரலாகி வருகிறது.

பாம்பைக் கண்டால், பீதி அடையாதவர்களே இல்லை என்று சொல்லலாம். பாம்பைக் கண்டால், படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், அந்த பழைய மொழியைச் சுக்கு நூறாக உடைத்து எரிந்து விட்டார்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம மக்கள்.

மகாராஷ்டிரா மாநிலம், கசாபே தவாண்டா கிராமத்தைச் சேர்ந்த பகுதியில் இரவு வேளை மட்டுமில் இல்லாமல், பகல் வேலையும் அதிக அளவில் பாம்பு நடமாட்டம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக, மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி ஊருக்குள்‌ சுற்றித் திரிந்த பாம்பைப் பிடிக்க அந்த பகுதி மக்கள் முயன்று உள்ளனர். பல முறை பாம்பு பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்து உள்ளது.

இதனை அடுத்து, பாம்பு பிடிப்பவர்களுக்கு ஆதரவாக அதே கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் கச்ரு கிலாரே என்பவர், உதவி செய்ய  முன் வந்துள்ளார். அதன் படி, சஞ்சய் கச்ரு கிலாரேவும், பாம்பு பிடிப்பவர்களுடன் சேர்ந்து பாம்பைத் தேடி வந்து உள்ளார். 

அந்த நேரம் பார்த்து, எதிர்பாராத நேரத்தில், அவரை பாம்பு கடித்து உள்ளது. இதனால், கடும் ஆத்திரமடைந்த சஞ்சய் கச்ரு கிலாரே, அந்த பாம்பைத் துரத்திப் பிடித்து 2 முறை மாறி மாறி கடித்துக் குதறி உள்ளார்.

இதனை அடுத்து, அந்த பாம்பைத் தான் வைத்திருந்த ஒரு பையில் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு, சஞ்சய் கச்ரு கிலாரே பாம்புடன் மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு இருந்தவர்கள் கடும் பீதி அடைந்தனர்.

மேலும், சஞ்சய் கச்ரு கிலாரேவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உடல் நிலை சீராக உள்ளதாகவும், பாம்பு விஷத்தை வெளியேற்றவில்லை எனவும் கூறி உள்ளனர். இதனையடுத்து, சஞ்சய் கச்ரு கிலாரேவுக்கு அந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாம்பு பிடிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாகப் பாம்பு கடித்ததால், ஆத்திரம் அடைந்த அந்த நபர் பாம்பைப் பிடித்து இருமுறை கடித்ததுடன், அதை மருத்துவமனைக்கும் பிடித்துச் சென்ற விநோத சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரலாகி வருகிறது.