உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கோவிட் - 19 கொரோனா வைரஸ், இன்றைக்கு இந்தியர்களுக்கு வாழ்வில் கலந்த விஷயம் போல ஆகிவிட்டது. அரசாங்கமே `கொரோனாவோடு வாழப் பழகுங்க என்று சொன்ன பிறகு, நாம் என்ன செய்ய?' என்ற நிலைக்குப் பலரும் வந்துவிட்டனர். இருப்பினும்கூட, இந்தியாவிலும் இன்னமும் சுயக்கட்டுப்பாடுகளெல்லாம் பின்பற்றப்பட்டுவருகிறது. குறிப்பாக, அதுசார்ந்த விழிப்புஉணர்வுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

என்னதான் அதிக நோயாளிகளைக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியாவில் மூன்றாவது நிலையிலிருந்தாலும், இங்குக் குணமாகி வீடு திரும்பும் நோயாளிகள் பட்டியலும் அதிகம். ஆகவே மக்கள் விழிப்புஉணர்வொடு இருந்தால், சூழல் நிச்சயம் கட்டுக்குள் வரும் என்கின்றது அரசாங்கம். 

இதேமாதிரியான சூழல், அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில்கூட கிடையாது என்பது, கவனிக்கத்தக்க விஷயம். அமெரிக்கா, உலகிலேயே அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஓர் நாடு. இங்கு, கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. மாஸ்க் அணிவதற்கு எதிரான கூட்டம் ஒன்றேவும், அமெரிக்காவில் இருக்கின்றது. அமெரிக்க மக்கள் என்றில்லை, அங்கு அரசாங்க பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் பலரும் அப்படியான நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பேவும் இதற்கு உதாரணம். கொரோனா பரவத் தொடங்கி ஆறு மாதம் கழித்து, அமெரிக்காவில் மட்டும் ஒன்றரை லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மாஸ்க்கேவும் அணிந்தார். `எங்கு, எப்போது வேண்டுமோ அப்போது அணிவேன்' எனச் சொல்லி, ஆறு மாதமாக ட்ரம்ப் மாஸ்க் கூட அணியவில்லை.

தன் நோயாளிகளைக் கண்டறிய அமெரிக்க அரசு திணறிவரும் நிலையிலும்கூட, ட்ரம்ப் பல தடுப்பு விஷயங்களில் முரண்பட்டிருக்கிறார். அரசன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி எனச் சொல்லும் விதமாக, அமெரிக்காவைச் சேர்ந்த டஸ்கலூசா (Tuscaloosa) என்ற நகரத்தில் உள்ள மாணவர்கள் சிலர் கொரோனா பார்ட்டி ஒன்றை ஒருங்கிணைத்து, மருத்துவத்துக்கு அப்பாற்பட்ட விஷயமொன்றைச் செய்திருக்கிறது. கொரோனா பார்ட்டி என்பது, கொரோனா பாதித்தவர்கள், பாதிக்காதவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதிக்காதவரையும் பாதிக்கவைப்பது! இப்படிச் செய்வதற்குப் பின்னும், ஒரு நுண்ணிய அறிவியல் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், அது ஏற்புடையதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதன் முழு பின்னணி இங்கே...

இந்த மாதிரியான வழிமுறை, இன்றைக்கு வந்ததல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பேவும் வழக்கத்திலிருந்திருக்கிறது. அதற்கான சிறந்த உதாரணம், ரூபெல்லா நோய். 

ரூபெல்லா நோய்க்குத் தடுப்பூசி கண்டறியும் முன்புவரை, ரூபெல்லா பார்ட்டி என்றொரு முறையை பின்பற்றித்தான் நோய் தடுக்கப்பட்டது. அந்த பார்ட்டியில், ரூபெல்லா நோய்ப் பெறாதவர்களை, நோய்ப்பெற்றவரோடு பழகவிட்டு, வலுக்கட்டாயமாகத் தொற்றுக்கு உள்ளாக்குவார்கள். அப்படி வலுக்கட்டாயமாகத் தொற்று பெற்றவருக்குச் சிகிச்சை தரப்பட்டுக் குணமாக்கப்படுவர். ரூபெல்லா நோயானது, பெரும்பாலும் கர்ப்ப காலத்திலுள்ள பெண்களுக்குத்தான் ஏற்படும் என்பதால், ரூபெல்லா பார்ட்டிக்கு `தொற்று இல்லாத - கர்ப்பமாகாத பெண்கள்' அவரவரின் திருமணத்துக்கு முன் அனுப்பப்படுவர். கர்ப்பத்துக்கு முன்னரே நோய் வந்து - அதிலிருந்து மீண்டுவிட்ட காரணத்தால், கர்ப்பமாகும் நேரத்தில் மீண்டும் நோய் ஏற்படாது என்பதால் இது செய்யப்பட்டது. இதன்மூலம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரூபெல்லா சிக்கல் தடுக்கப்பட்டுவிட்டது. 

தடுப்பூசி கண்டறியும்வரையில், இப்படித்தான் இந்த நோயைக் கையாண்டனர் நம் மக்கள்.

ஆனால், ரூபெல்லா போல கொரோனாவுக்கும், பார்ட்டி தீர்வாகாது என்பதற்கான காரணம்....

இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ள நோய் - மிகக்குறிப்பிட்டவருக்கு மட்டுமே ஏற்படும் பாதிப்புகளுக்கு மட்டுமே இப்படியான ரிஸ்க்கை எடுக்க முடியும். கொரோனா, அப்படியான நோய்ப்பாதிப்பில்லை. ஆகவே ஆரோக்கியமானவர்களை வலுக்கட்டாயமாக நோய்க்கு உட்படுத்துவது, சரியான தீர்வாக இருக்காது. மீறி செய்வது, பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே, வலுக்கட்டாயமாக ஒருவரை நோயைப் பெற அனுமதிப்பது, நிச்சயம் சிக்கலாகும். 

இப்படியான சிக்கல்தான், இப்போது அமெரிக்க மாணவர்கள் முன்னெடுத்து நடத்தியிருக்கும் கொரோனா பார்ட்டி முன்னெடுப்பிலும் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து டெக்ஸாஸ் மாகாணத்தின் சான் ஆன்டோனியோ பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி ஜேன் ஆப்பிள்பை கூறும்போது, "அந்த இளைஞர் கொரோனா வைரஸ் என்பதே வதந்தி எனத் தீவிரமாக நம்பியுள்ளார். அதன் காரணமாகவே அவர், கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். தான் ஓர் இளைஞர் என்பதால் தன்னை நோய்த்தொற்று அண்டாது என நம்பியுள்ளார். ஆனால், அது நடக்கவில்லை. அவருக்கும் நோய் ஏற்பட்டது. அதேநேரம், அவரது உயிரும் சிகிச்சை பலனின்றி பிரிந்துவிட்டது" எனக்கூறியிருக்கிறார். 

தொற்று ஏற்பட்ட பின் அந்த நபர், வீடியோ மூலம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அப்போது அவர் செவிலியிடம் மிகுந்த வருத்தத்துடன் "நான் தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

நிகழ்வுகளைத் தொடர்ந்து, அமெரிக்கா, உடனடியாக தங்கள் மக்களிடம் மத்தியில் விழிப்புஉணர்வை தொடங்க வேண்டும் எனக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள் குழு.
 

 ஜெ.நிவேதா.