விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபார்சி வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்கள் மூலம் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழின் முக்கிய நட்சத்திர நடிகரானார்.

தமிழின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜயுடன் இவர் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் இயக்குநர் பிரேம்குமார் நடிப்பில் இவர் நடித்திருந்த '96' மற்றும் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய படங்கள் இவருக்கு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டைப் பெற்றுத்தந்தன. சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் ஏற்றிருந்த திருநங்கை கதாபாத்திரம் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது.

தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு, இந்தி மொழியிலும் ஒரு சில படங்களில் இவர் நடித்துவருகிறார். இந்நிலையில், இந்தியில் தயாராகும் 'ஃபார்சி' வெப் சீரிசில் இவர் நடிப்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் ஷாஹித் கபூரை கதைநாயகனாக வைத்து தயாராகிவரும் இணையத்தொடர் 'ஃபார்சி'. 'தி பேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ் & DK இந்தத் தொடரை இயக்குகின்றனர். இத்தொடர் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் ஷாஹித் கபூருடன், ராஷி கண்ணா, கே.கே.மேனன், விஜய் சேதுபதி, ரெஜினா கசண்ட்ரா, ஜாகிர் உசேன், புவன் அரோரா, அமோல் பலேகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இது குறித்த அறிவிப்பு வீடியோ ஒன்றை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

திரில்லர் ரக பாணியில் உருவாகும் இந்த வெப் சீரிஸை D2R Films நிறுவனம் தயாரிக்கிறது. இதனைத் தொடர்ந்து, இத்தொடரில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. எந்த கதாபாத்திரமானாலும் அதை அநாயாசமாக எடுத்துக்கொண்டு நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இத்தொடரில் எது சார்ந்ததாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகிறது. 

 

no cons allowed beyond this point 🙅‍♂️#Farzi @VijaySethuOffl @rajndk #FarziOnPrime pic.twitter.com/BOrO76x4cT

— prime video IN (@PrimeVideoIN) January 4, 2023