ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு சிறந்த திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & நடிகர் சூரி இணைந்து நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் நாவலைத் தழுவி தயாராகும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது.

இதனையடுத்து நடிகர் சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், அவரது தயாரிப்பில் அருண்மொழி சோழன் மற்றும் மேதகு பிரபாகரன் அவர்களின் பயோபிக் படங்களை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு அருள்மொழிவர்மன், பொன்னியின் செல்வன் எனும் மாமன்னன் ராஜராஜ சோழனை இந்து என சில அமைப்புகளை சார்ந்தவர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்த நிலையில், இவை அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் வெற்றிமாறன் தனது தரமான பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படங்களை இயக்க உள்ளதாக தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
 

தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, எங்கள் பாட்டன் அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழன் அவர்களின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி, எங்கள் அண்ணன், தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத் தம்பி வெற்றிமாறன் இயக்குவார். “வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள்” என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும்.

என தெரிவித்துள்ளார் சீமான் அவர்களின் அந்த அறிக்கை இதோ…
 

தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார். pic.twitter.com/e4IwrcG51c

— சீமான் (@SeemanOfficial) October 5, 2022