தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் முன்னதாக இந்த ஆண்டு (2022) தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் த்ரில்லர் படமான O2 ஆகிய படங்கள் வெளியானதை தொடர்ந்து தெலுங்கில் காட்ஃபாதர் மற்றும் மலையாளத்தில் கோல்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தன.

அடுத்ததாக தற்போது பாலிவுடிலும் கதாநாயகியாக களமிறங்கும் நயன்தாரா, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்கிறார். இதனிடையே நயன்தாராவின் மாயா படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கனெக்ட்.

நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில், கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இடைவேளை இல்லாத முழு நீள 99 நிமிட திரைப்படமாக வெளிவரும் கனெக்ட் திரைப்படம் நாளை டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை நயன்தாரா கனெக்ட் திரைப்படத்திற்காக சிறப்பு பேட்டியில் பேசியுள்ளார். ரசிகர்களின் தொகுப்பாளர் DD (எ) திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க, அவரது கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக  பதிலளிக்கும் நயன்தாராவின் இந்த சிறப்பு பேட்டியின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தற்போது சோசியல் மீடியா எதிலும் நீங்கள் இல்லாதபோதும் ரசிகர்கள் உங்களோடு தொடர்பில் இருப்பதாகவே தொடர்ந்து உங்கள் மீது அன்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, “நான் சோசியல் மீடியாவில் இல்லை என்றாலும் எல்லாவற்றையும் பார்க்கிறேன். ஒவ்வொரு ட்வீட்டும், என்னுடைய பிறந்தநாளுக்கு நிறைய பேர் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அவர்களுக்கு தெரியும் நான் சோசியல் மீடியாவில் இல்லை என்று, அவர்களுக்கு என்னிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப் போவதில்லை. நான் அவர்களுக்கு ஒரு ஹார்ட்டோ அல்லது ஒரு தேங்க்யூ கூட நான் அனுப்ப மாட்டேன் நான் அது அனுப்பவில்லை என்றாலும் கூட, நாங்கள் உங்களுக்காக வாழ்த்துகிறோம் என வரும் அவர்களது வாழ்த்துக்கள் தான் எனது மிகப்பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன். மற்றவர்கள் சோசியல் மீடியாவில் இருக்கிறார்கள் இது மாதிரியான வாழ்த்திற்கு ஏதாவது ஒரு சிறிய பதிலாவது கொடுப்பார்கள். என் விஷயத்தில் அப்படி எதுவுமே இல்லை. அப்படி இருந்தும் வரும் இவ்வளவு அன்பை பார்க்கும்போது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் அப்படி வரும் ஒவ்வொரு ட்வீட்டும் பார்க்கும்போது தான் எங்கேயோ ஏதோ சரியாக செய்திருக்கிறேன் என அந்த ஒரு மனநிறைவு இருக்கும். இது மாதிரி எனக்காக வாழ்த்துக்கள் கூறியவர்கள் அனைவருக்கும் என்னால் அப்போது எந்த பதிலும் சொல்லியிருக்க முடியாது. ஆனால் நான் இப்போது சொல்கிறேன்.. I Really Really Love you all உங்கள் அனைவருக்கும் அவ்வளவு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இப்படி ஒரு அற்புதமான ரசிகர்களை நான் பெற்றுத்தற்கு. என்னைப் பற்றி எந்த ஒரு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் என்ன நடந்தாலும் என் ரசிகர்கள் என்னோடு துணை நின்றார்கள் இதுதான் உண்மையான ஆசீர்வாதம். அவர்கள் பொழியும் இந்த அன்பிற்கு என் இதயத்தில் இருந்து சொல்கிறேன் நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்” என நயன்தாரா பதிலளித்துள்ளார். நயன்தாராவின் அந்த முழு பேட்டி இதோ…