மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தெலுங்கில் வாரசுடு என வெளியாகிறது.

வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. அதே நாளில் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருப்பதால் இந்த பொங்கல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜயின் மற்ற படங்களை போலவே இந்த வாரிசு திரைப்படத்திலும் பாடல்கள் வைரல் ஹிட் அடிக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் முதல் பாடலாக வெளிவந்த “ரஞ்சிதமே” பாடல் லிரிக் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைக்க, சிலம்பரசன்.TR பாடிய “தீ தளபதி” பாடலும் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த வரிசையில் வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது பாடலாக தற்போது வெளியாகியுள்ளது Soul Of Varisu பாடல். இந்திய சினிமாவின் ஈடுஇணையற்ற பாடகியான KS.சித்ரா அவர்கள் பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரம்மியமான அந்த பாடல் இதோ…