பாலிவுட் திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை கீர்த்தி சனான் ஹீரோபன்டி, தில்வாலே, ராப்டா, ஸ்த்ரீ, கலங்க், ஹவுஸ் ஃபுல் 4, பானிபட், மிமி உட்பட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிமி திரைப்படத்தில் இடம்பெற்ற பரம சுந்தரி பாடலால் தமிழகத்திலும் கீர்த்தி சனான் பிரபலமடைந்தார்.

முன்னதாக இந்த ஆண்டில்(2022) ஜிகர்தண்டா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக அக்ஷய் குமார் உடன் இணைந்து கீர்த்தி சனான் நடித்த பச்சன் பாண்டே மற்றும் டைகர் ஷெராஃப் உடன் இணைந்து நடித்த ஹீரோபண்டி 2 ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் வருண் தவானுடன் இணைந்து காமெடி ஹாரர் திரைப்படமாக கீர்த்தி சனான் நடித்த பேடியா திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே பேடியா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பேசிய நடிகர் வருண் தவான் கீர்த்தி சனான் தற்போது ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். கீர்த்தி சனானின் பெயர் ஒருவரது இதயத்தில் இருக்கிறது. ஆனால் அந்த நபர் மும்பையில் இல்லை. அவர் தீபிகா படுகோனுடன் ஷூட்டிங்கில் இருக்கிறார் என அவர் தெரிவித்தார்.

தற்சமயம் நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் பிரபாஸ் ஈடுபட்டு வருகிறார். மேலும் கீர்த்தி சனானுடன் இணைந்து நடிகர் பிரபாஸ், ஆதிப்ருஷ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். எனவே பிரபாஸுடன் கீர்த்தி சனான் காதலில் இருப்பதாக மறைமுகமாக வருண் தவான் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் இந்த செய்திகள் பரவ, இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நடிகை கீர்த்தி சனான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரில் விளக்கம் அளித்து பதில் அளித்துள்ளார். “விளையாட்டாக தான் வருண் தவான் அவ்வாறு தெரிவித்திருந்தார். மற்றபடி அவர் கூறியதில் எந்தவிதமான உண்மையையும் கிடையாது” என திட்டமிட்டமாக தெரிவித்திருக்கிறார்.