அனைத்து சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக ஈடு இணையற்ற இந்திய திரை உலகின் ஜாம்பவானாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸாக தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாபா திரைப்படம் கடந்த 2002ம் ஆண்டு ரிலீஸானது. தற்போது மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன்  ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் 12ஆம் தேதி ரிலீசாக தயாராகி வருகிறது. 

படத்தொகுப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வெர்ஷனில் பாபா திரைப்படம் ரிலீஸாக உள்ளது. அதற்கென பிரத்தியேகமாக தன்னுடைய புதிய டப்பிங்கையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் பேசிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் பாபா ரீ-ரிலீஸுக்காக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து மனம் திறந்து பேசினார். 

அதில், “படத்தை மீண்டும் முழுவதுமாக படத்தொகுப்பு செய்துள்ளோம். ஒரிஜினலில் 3 மணி நேர திரைப்படம் தற்போது 2½  மணி நேரமாக மாற்றி 30 நிமிடங்களை குறைத்துள்ளோம். அப்போது அது நெகட்டிவ் ஃபிலிமில் படமாக்கப்பட்டது, DTS தான். இப்போது அதை டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளோம். படத்தின் ஒவ்வொரு பிரேமையும் டிஜிட்டலுக்கு மாற்றி அழகு படுத்தியிருக்கிறோம். அதேபோல் சவுண்டில் 5.1 DTSல் இருந்ததை டால்பிக்கு இணையாக மெருகேற்றியுள்ளோம். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் கேட்டார், அவருக்கு ஒரு காப்பி கொடுத்து இருக்கிறோம். இன்னும் என்னென்ன செய்ய முடியும் என பார்க்கிறோம். ரிலீஸ் தேதி நெருங்கி இருக்கிறது எனவே நிறைய பணிகள் சின்ன சின்னதாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படத்தொகுப்பு செய்ததால் சில பேட்ச் பணிகள் செய்திருக்கிறோம். மீண்டும் கொஞ்ம் டப்பிங் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் செய்திருப்பதால் ஒரு FRESHNESS இருக்கும் கலர்ஸ் சவுண்ட்ஸ் அனைத்திலும்... இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தார் போல் படம் ஃபாஸ்ட்டாக இருக்கும். ரஜினி சார் உடைய அனைத்து மாஸ் விஷயங்களும் கண்டிப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…