தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தீனா, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்தார். பவர் பாண்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தும்பா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கைதி திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கார்த்தியுடன் இணைந்து காமெடி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருப்பார். 

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்த திரைப்பிரபலங்களில் தீனாவும் ஒருவர். எனவே சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வந்தார். சென்ற லாக்டவுனில் கை சுத்திகரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து அசத்தினார் தீனா. இனிவரும் காலங்களிலும் பள்ளிக்கூடங்கள், வங்கிகள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் கிருமி தொற்று பரவாமல் இருக்க தீணா வடிவமைத்த இந்த இயந்திரம் நிச்சயம் பயன்படும் என்று பாராட்டினர் ரசிகர்கள். 

இந்நிலையில் நடிகர் தனுஷ் படங்களின் மாஸ் காட்சிகளை ரீகிரியேட் செய்துள்ளார் நடிகர் தீனா. நடிகர் தீனா தீவிர தனுஷ் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. தனுஷ் இயக்கி நடித்த பவர் பாண்டி படத்திலும் தீனா நடித்துள்ளார். இப்படியிருக்க தீனாவின் இந்த போட்டோஷூட்டை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். தீனாவின் போட்டோஷூட்டில் அசுரன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோக்களை அடைக்கப்பன் எடுத்துள்ளார். வினோத் காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார். 

தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். அப்படிபட்ட கலைஞன் நடித்த சிறந்த காட்சிகளை தீனா மீண்டும் புகைப்படம் வாயிலாக கொண்டு வந்தது, தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் தீனா. XB பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கொரோனா பாதிப்பு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிந்தது. 

மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார்.