இன்று முதல் அரசு பள்ளிகளில் “எண்ணும் எழுத்தும் திட்டம்” தொடக்கப்பட்டு உள்ள நிலையில், “அனைவருக்கும் கல்வி தருவதே திராவிட மாடல்” என்று, முதலமைச்சர் மு.க. மு.க. ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார். 

ஒருமாத கால கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் முதல் தனியார் பள்ளிகள் வரை அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தான், கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைக் போக்கும் வகையில், “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சற்று முன்னதாக தொடங்கி வைத்தார். 

அதன் படி, திருவள்ளுர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2022-23 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட இருக்கும் “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைத்தார்.  

அதாவது, கொரோனா என்னும் பெருந்தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் சுமார் 19 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு கிடந்தன. 

இதனால், பள்ளிகளில் வகுப்புகள் இல்லாத நிலையில் மாணவர்களின் கற்றலில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டதாக பொதுவான கருத்து முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான், இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, தமிழக அரசு, 2022-23 ஆம் கல்வியாண்டு முதல், அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது.

இத்திட்டத்தின் படி,  வரும் 2025 ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட  அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெற வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

அத்துடன், இந்த திட்டத்திற்கு ஏற்ப “எண்ணும் எழுத்தும்” திட்டத்தில் அரும்பு, மொட்டு, மலர் என்னும் பெயர்களில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களுக்கு சூழ்நிலையியல் பாடத் திறன்களையும் ஒருங்கிணைத்து முதல் முறையாக நிலைவாரியான பயிற்சி நூல்கள் (Level Based Work books) உருவாக்கி, மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

மேலும், இவ்விழாவில் “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எண்ணும் எழுத்தும்” மாதிரி வகுப்புகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற, ஒவையார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். 

“தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என்றும், எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றமடையும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“ஆசிரியர்களின் கருத்து கேட்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும், எளிமையான வகையில் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது” என்றும், முதல்வர் எடுத்துரைத்தார். 

“தொடக்க கல்வி என்பது சமூகத்தின் திறவுகோல் என்றும், 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவு பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, “அனைவருக்கும் கல்வி தருவதே திராவிட மாடல் ஆட்சி” என்றும், முதலமைச்சர் மு.க. மு.க. ஸ்டாலின், இவ்விழாவில் சூளுரைத்தார்.

இந்த விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர்,  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திரு. திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.