புகையிலை, பான் மசாலா பெயரில் “சோடா” என்று கூறிக்கொண்டு மதுபானம் விற்கப்படுவதாக அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்தியாவில் மதுபானங்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்கள் சமீப காலமாக அதிகம் தொலைகாட்சிகளில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வந்தன.

இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் குவிந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மதுபானங்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான விளம்பரங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பான் மசாலா உள்ளிட்ட சில பிராண்ட் பெயரை நினைவுபடுத்தும் வகையில் சோடா என்கிற பெயரில், பான் மசாலா, தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் உலா வரத் தொடங்கின. இதற்கும் பரவலாக கடும் எதிர்ப்பு எழுந்தது. 

இந்த நிலையில் தான், பொது மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் இது போன்ற விளம்பரத்திற்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. 

அந்த வகையில், “மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள், தவறான தகவல்கள் போன்ற காரணத்தால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்வதாக” மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தற்போது கூறி உள்ளது. 

அத்துடன், “இது போன்ற விளம்பரங்கள் சரியான தகவல் பெரும் உரிமை, பாதுகாப்பற்ற பொருட்களுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளும் உரிமை, சேவைகளுக்கான உரிமை என்று, பல்வேறு உரிமைகளை மீறுவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

மேலும், “பொது மக்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்களுக்கு உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர், விளம்பரத்திற்கு ஒப்புதல் அளித்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றும், தற்போது புதிய காட்டுப்பாடுகளுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, இதே தவறுகளை தொடர்ந்து செய்வோருக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படுவதோடு, சம்மந்தப்பட்டவர்கள் அல்லது சம்மந்தப்பட்ட அந்த நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்” என்றும், மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.