இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழும் இசையமைப்பாளர் ARரஹ்மான் இசையில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ARரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்TR நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ள ரஹ்மான் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவரவிருக்கும் கோப்ரா படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடித்து வரும் மாமனிதன் படத்திற்கும் ARரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே துபாய் எக்ஸ்போவில் மக்கள் மனதை வென்ற ARரஹ்மானின் தன்னலமற்ற செயல் குறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த துபாய் எக்ஸ்போவில் ARரஹ்மானுடன் இணைந்து யுவன்ஷங்கர்ராஜா, சந்தோஷ் நாராயணன், அணிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டு ரசிகர்களை தங்கள் இசைமழையில் நனைய வைத்தனர். இந்த நிகழ்வில் AR.ரஹ்மானின் பங்கு மிகப் பெரியது என குறிப்பிட்டு இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில், “பல மேற்கத்திய வெளிநாட்டு இசைக் கலைஞர்களை வரவேற்கும் இந்த எக்ஸ்போவில் எங்கள் நாட்டு இசைக் கலைஞர்களையும் வரவேற்க வேண்டும் அவர்கள் கலந்து கொண்டால் மட்டுமே நானும் இந்த எக்ஸ்போவில் பங்கு பெறுவேன் என ARரஹ்மான் பேசியது குறித்தும், குறிப்பாக இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் உட்பட இசையமைப்பாளர்களை முன்மொழிந்து பேசியது குறித்தும் யுவன் ஷங்கர் ராஜா பேசியுள்ளார். ARரஹ்மானின் இந்த செயல் குறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசிய அந்த வீடியோ இதோ…