உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டன்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி & ஃபகத் பாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளன.

முன்னதாக விக்ரம் படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தன் கைப்பட கடிதத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த உலகநாயகன் தொடர்ந்து ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் பேசி வீடியோ வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மேலும் ஒரு பரிசை கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் எழுதி அனுப்பிய கடிதத்திலேயே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக தெரிவித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு மேலும் சந்தோஷம் அளிக்கும் வகையில் கமல்ஹாசன் விலை உயர்ந்த LEXUS காரை தற்போது பரிசாக அளித்துள்ளார். கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு காரை பரிசளிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இதோ…