“ஆர்.எஸ்.எஸ். குரலாக பேசும் நிலைக்கு ஆதீனங்கள் மனம் மாறிவிட்டனர்” என்று, தமிழக அரசியல் கட்சிகள் கொந்தளித்து உள்ளது, சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளமாக மாறி உள்ளது.

அதாவது, விசுவ இந்து பரிஷத்தின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பிலான மாநிலம் தழுவிய துறவியர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மதுரை ஆதீனம்,  “தற்போது பாரதியார் இருந்திருந்தால், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடி இருப்பார்” என்று, தமிழக அரசை விமர்சனம் செய்தார். 

அத்துடன், அரசியல் கோயில்களிலும் புகுந்து விட்டது என்றும்,  ஆன்மீகவாதிகள் ஆரசியல் பேசக் கூடாது என சொல்கிறார்கள் என்றும், நாங்கள் ஏன் அரசியல் பேசக்கூடாது? என்றும், நாங்கள் பேசாமல் வேறு யார் பேசுவது?” என்றும், அவர் அடுக்காடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும்,  “கோயில் சொத்துக்கள் தொலைந்துபோகின்றன என்றும், தமிழ்நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் கோயில்களுக்குள்தான் இருக்கிறது என்றும், அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை உள்ளது? என்றும், அவர் இன்னும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

குறிப்பாக, “திரைப்படத்தில் இந்துக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகர் விஜயின் படங்களை யாரும் பார்க்காதீர்கள்” என்று, ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார். 

முக்கியமாக, இந்த துறவியர் மாநாட்டில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சில முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

அதன்படி, “இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகளை உள்ளடக்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று, வலியுறுத்தப்பட்டது.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இது குறித்து கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி, தனது சமூக வலைதள பக்கத்தில் பொங்கி எழுந்து உள்ளார். அதில், தனது கருத்துகளை தெரிவித்த அவர், மதுரை ஆதீனத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். 

இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி. கூறிய பதிவில், “தமிழ் மண்ணின் ஆன்மீக மரபில் ஒரு தனிச்சிறப்பான இடம் ஆதீனங்களுக்கு உண்டு. குன்றக்குடி, பேரூர் உள்ளிட்ட ஆதினங்கள் தமிழ் மண்ணோடும், மரபோடும், சமூக வாழ்வோடும் இணைந்து பயணிப்பவை. சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்தவை” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “ஆதினங்களின் ஆன்மீகம் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானது என்றும், ஆர்எஸ்எஸ் இன் ஊதுகுழலாக ஒலிக்கும் தற்போதைய மதுரை ஆதினம் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“தமிழகத்தின் தொன்மையான ஆதீன மரபிற்கு களங்கம் விளைவிப்பவர்கள். இவர்களிடம் தமிழகம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும், ஆதீனப் போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் குரலாக, அமைதி, நல்லிணக்கத்தின் அடையாளமான தமிழக மண்ணில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு உறுதியான மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். 

அதே போல், “பிரதமர் மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்களாக ஆதீனங்கள் மாறிவிட்டனர் என்றும், ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது” என்றும், மார்க்சிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆதினங்கள், அரசியல் பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இஸ்லாமியர்கள் தேச விரோதிகள் என்று பேசுவது எந்த வகையில் நியாயம்?” என்று, எதிர் கேள்வி எழுப்பினார். 

அத்துடன், “கோயிலில் அறநிலைத்துறை கொள்ளையடிக்கிறது, அங்கு தவறு நடக்கிறது என்பதெல்லாம் வரம்பு மீறிய பேச்சு” என்றும், மதுரை ஆதினத்தை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். 

“ஒரு கோயில் எப்படி தீட்டிதர்களுக்கு சொந்தமாக முடியும்? அது மக்களுக்கு தான் சொந்தம்? சிதம்பர நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாடில் கொண்டு வர வேண்டும். ஆதீனங்கள் ஆன்மீக பணியை மட்டும் தான் செய்ய வேண்டும். கோவில்களை ஏன் ஆதீனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்?” உள்ளிட்ட வரிசையாக கேள்விகளை அவர் முன்வைத்தார்.

குறிப்பாக, “பிரதமர் மோடிக்கு வக்காலத்து வாங்குபவர்களாக ஆதினங்கள் மாறிவிட்டனர்” என்று, விமர்சனம் செய்த அவர், “ஆன்மிகத்தில் ஈடுபடும்  ஆதினங்கள், ஒரு தலைபட்சமாக பேசி வருகிறார்கள்” என்றும், விமர்சனம் செய்தார். 

“ஆதினங்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது, ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன என்றும், அதனால், ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ஆதீனங்கள் மாறக்கூடாது” என்றும், பாலகிருஷ்ணன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். 

இதனிடையே, “வவ்வாலாக நீங்கள் பிறப்பீர்கள் என்று சாபம் விடுவது, நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் என்றும், சு.வெங்கடேசன் மற்றும் சாலமன் பாப்பையா உள்ளிட்டவர்களையும் மதுவரை ஆதினம் விமர்சனம்” செய்தது குறிப்பிடத்தக்கது.