வரதட்சணை பெற்று கொண்டு ஒன்றுக்கு, இரண்டாக திருமணம் செய்த காவலர் ஒருவர், அந்த 2 மனைவிகளை கழட்டி விட்டு வரதட்சணைக்காக 3 வது திருமணத்திற்கு தயாராகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் என்பவரது மகன் முகமது ரபிக், சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற நிலையில், அவர் அங்கு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இந்த சூழலில் தான், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற காவலர் ரபிக்கிற்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அத்திக்கடையைச் சேர்ந்த தஸ்லீமா என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

இந்த திருமணத்திற்காக, 2.50 கோடி ரூபாய் பணம் செலவு செய்து, பெண் வீட்டார் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.

ஆனால், இந்த திருமணம் நடைபெற்ற ஒரே மாதத்தில், “மனைவிக்கு மன நலம் சரியில்லை என்றும், மனைவியின் நடத்தை சரியில்லை” என்றும் கூறிய முகமது ரபீக், அந்த மனைவியை இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார். 

அத்துடன், முகமது ரபிக் “விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதோடு, வரதட்சணையாக பெற்ற எதையும் திருப்பி கொடுக்கவில்லை” என்றும் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், சிங்கப்பூர் போலீசில் புகார் அளித்தனர். 

மேலும், இங்குள்ள திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும்  முகமது ரபிக் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், “குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரி சிங்கப்பூரில் இருக்கிறார் என்றும், அவர் இந்தியா வரும்போது விசாரிக்கிறோம்” என்றும், கூறியதாக தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாக, முகமது ரபீக்ஈ தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமர் நிஸா என்பவரை 2 வதாக திருமணம் செய்திருக்கிறார். 

இந்த திருமணத்தின் போது ஒரு கோடிக்கும் மேல், பெண்ணின் பெற்றோர் செலவு செய்து, இந்த திருமணத்தை நடத்தி வைத்து உள்ளனர்.

இதனையடுத்து, முதல் மனைவிக்கு நேர்ந்த அதே கதி, இந்த 2 வது மனைவியான அமர் நிஸாவிற்கும் நேர்ந்து இருக்கிறது. 

அதுவும், திருமணமான ஒரு மாதத்தில் தனது 2 வது மனைவியை, ரபிக் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைத்து உள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அமர் நிஸா பெற்றோர், சிங்கப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும், அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான், வரதட்சணைக்காகவே திருமணம் செய்துகொண்டு பெண்களை ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் முகமது ரபீக், தற்போது 3 வதாக ஒரு திருமணத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும், இது தொடர்பான திருமண பேச்சு வார்த்தைகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த முதல் மனைவி தஸ்லீமா மற்றும் 2 வது மனைவி அமர் நிஸா ஆகியோரின் பெற்றோர், ஒன்றாக சேர்ந்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது மீண்டும் புகார் அளித்து உள்ளனர். 

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான செய்தி, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இடையே வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.