உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஃபேன்பாய் சம்பவமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் சில நிமிடங்களே தோன்றிய சூர்யா மிரட்டினார். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் அனிருத் இசையில் உருவான விக்ரம் படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார். சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து நடிக்கும் புதிய படம் குறித்த ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியின் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் இதனை தெரிவித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து நடிக்கும் புதிய படம் குறித்து தொகுப்பாளர்களான ராஜு மற்றும் பிரியங்கா உலகநாயகன் இடம் கேட்க, “தன்னிடம் எடிட்டராக பணியாற்றியவரும், ஃபகத் பாசில் நடித்த மாலிக் திரைப்படத்தின் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும்  இத்திரைப்படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும் உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது அடுத்த படம் குறித்து கமல்ஹாசன் பேசிய அந்த ப்ரோமோ வீடியோ இதோ…