தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன்-லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், வருகிற ஜூன் 9ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெறும் இத்திருமணத்தை அழகிய தொகுப்பாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க, நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேரில் சென்று தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர பிரபலங்கள் அனைவரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.  

இந்த சந்திப்பின்போது, "போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, நானும் ரவுடி தான், நெட்ஃபிலிக்ஸில் பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் வெளிவந்த லவ் பண்ணா உட்ரணும் மற்றும் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றி, தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் பாடலாசிரியர் என என்னுடைய படைப்புகளை அங்கீகரித்து ஆதரிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.

மேலும் முன்னதாக திருமணத்தை திருப்பதியில் நடத்த திட்டமிட்டதாகவும் பின்னர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்போது மகாபலிபுரத்தை திருமணத்தை நடத்துவதாகவும், திருமணம் முடிந்து மதியத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு திருமணம் நடைபெறுவதாகவும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாகவும் அப்போது அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் விருந்து அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அந்த வீடியோ இதோ…