வழக்கமான கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக கடந்த ஆண்டு(2022) வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்.TR - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிக் கூட்டணியில் 3வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில் வெந்து தணிந்தது காடு உருவானது.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கடந்த ஆண்டில்(2022) FIR, செல்ஃபி, சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை, நடிகர் சந்தீப் கிஷனின் மைக்கேல் மற்றும் ஜீவி பிரகாஷின் 13 உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் கௌதம் மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நமது கலாட்டா ப்ளஸ் சேனலில் நடைபெற்ற தமிழ் சினிமா ROUND TABLE 2022 நிகழ்ச்சியில் பேசுகையில் அடுத்ததாக,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார். மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வெந்து தணிந்தது காடு படத்தில் தவறாக அமைந்த ஒரு பாடலை குறிப்பிட்டு பேசினார்.

உங்களது படத்தில் அந்த காதல் பாடல் வைக்கும் நம்பிக்கை எங்கு இருந்து வருகிறது..? இன்றைய ட்ரெண்ட் இது கிடையாது நாம் மாற்றிக் கொள்வோம் என நீங்கள் சொல்வது கிடையாது.. எனக் கேட்டபோது, “இது ட்ரெண்டா என்ன என்பது எனக்கு தெரியாது. இது மிகவும் இயற்கையாக நடக்கும் ஒன்று. ஒரு காதல் கதை அதற்காக ரஹ்மான் சார் மூன்று பாடல்கள் கம்போஸ் செய்து ரெக்கார்ட் செய்து, அது போகலாம் என இருக்கும் பொழுது தான் இந்த ஐடியா வந்து நான் சிலம்பரசன்.TR மற்றும் தயாரிப்பாளர் இருவரிடமும் சொல்லி பின்னர் மீண்டும் ரஹ்மான் சாரிடம் பேசி நடைபெற்றது. அவர் இருக்கிறார் என்பதற்காக இந்த படத்தில் நான் பாடல்களை கொண்டு வரவில்லை. இயற்கையாகவே அந்த திரைக்கதை எழுத ஆரம்பிக்கும் போதே, அந்த ஊரில் இருந்து அவன் கிளம்பும்போது அந்த ரயிலில் இசையோடு அதை சொல்லலாம் என தோன்றியது. ஒருவேளை மல்லி பூ பாடல் மட்டும் தான் ஒரு காட்சியாக இருந்ததை ரஹ்மான் சாரின் ஆலோசனையில் இதை இசையில் முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் அந்த காதல் பாடலில்… அந்த மாடியில் அவர்கள் இருவரும் சந்திக்கும்போது அந்த சமயத்தில் வித்தியாசமாக ஒன்று செய்யலாம் என நான் நினைத்தது அங்கே லிப் சின்க் வைக்கலாமா வேண்டாமா என்பதுதான் நான் நினைத்தேன். ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்தில் மியூசிக்கலாக ஒன்று செய்யலாமே என நினைத்தேன். இது இதுவரை நான் என்ன செய்திருக்கிறேனோ அதிலிருந்து எனக்கு கிடைத்த நம்பிக்கை தான். ஆனால் அந்தப் பாடல் வெந்து அணிந்தது காடு படத்தில் தவறாக அமைந்தது என நினைக்கிறேன். அந்தப் பாடலை லிப் சின்க் இல்லாமல் செய்திருக்கலாமோ என தோன்றியது. முதல் மூன்று நான்கு நாட்களில் திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை பார்த்த பின் அப்படி தோன்றியது. ஆனால் இது மிகவும் இயற்கையாக நடந்த ஒன்றுதான். ரஹ்மான் சார் அவர்களுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு இருக்கிறது என இதை நான் செய்யவில்லை. இதுவரை எந்த படத்திற்கும் அப்படி நான் செய்ததில்லை!” என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். அந்த முழு வீடியோ இதோ…