இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த வை ராஜா வை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார்.

இதனையடுத்து ரங்கூன், இவன் தந்திரன், இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு என வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் யுத்த சத்தம். அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பத்து தல படத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், திரிபுரா கிரியேஷன்ஸ், Taurus சினி கார்ப் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவில், சாம்.CS இசை அமைக்கிறார்.  வெகு விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிகர் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தளபதி விஜய் நடிக்கும் தளபதி66 திரைப்படத்திலும் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.