தென்னிந்திய திரை உலகில் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் நடிகை ராதிகா சரத்குமார், 80-90 களின் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திர நாயகியாக திகழ்ந்தவர். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில்  குணச்சித்திர வேடங்களிலும் மிக முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் நல்ல தயாரிப்பாளராகவும் தனது ராடான் நிறுவனத்தின் மூலம் பல தொலைக்காட்சி தொடர்களையும் திரைப்படங்களையும் தயாரித்து வரும் ராதிகா சரத்குமார் தற்போது தனது புதிய திரைப்படத்தின் பிரமாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ராதிகாவின் ராடான் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒப்புக் கொண்டதாக ராதிகா தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகிவரும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

இதனிடையே மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.