தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான குண்டக்க மண்டக்க மற்றும் இயக்குனர் சுந்தர்.C கதாநாயகனாக நடித்த பெருமாள் ஆகிய திரைப்படங்களில் கதாசிரியரான பாலகுமாரன் திடீரென மாரடைப்பால் காலமானார்.

இதுகுறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கதாசிரியர் பாலகுமாரனின் புகைப்படத்தை பதிவிட்டு,

பார்த்திபன்,வடிவேலு நடிப்பில், 2005 ம் ஆண்டு வெளியான குண்டக்க மண்டக்க திரைப்படம், 2009ம் ஆண்டு சுந்தர்.C நடிப்பில் வெளியான பெருமாள் திரைப்படத்தின் கதாசிரியர் பாலகுமரன் என்கிற பாலு 
நேற்று காலை மாரடைப்பால் இறந்த செய்தி என்னை எட்டும் போது இரவாகிருந்தது.
சென்னை சாலிகிராமம் சாரதாம்பாள் அறை நண்பன் இறந்த செய்தி இடையறாது தூக்கத்தைத் தொந்தரவு செய்தவண்ணம் இருந்தது.
எடிட்டரின் உதவியாளராக நான் பிரபல எடிட்டர்கள் லெனின் மற்றும் விடி விஜயன் அவர்களின் அறையில் வேலை செய்யும் போதிருந்தே பழக்கம். சென்னையில் தங்க அறை வேண்டும் என்ற போது என் அறையில் தங்கிக்கொள்ளலாம் என்று என்னை சாரதாம்பாள் அறைக்கு அழைத்து போனவன்.
அப்போது அவன் இயக்குநர் பிரதாப் போத்தன் அவர்களிடம் மகுடம், ஆத்மா திரைப்படங்களில் உதவி இயக்குநராய் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். வருடம் சரியாக 1992 இருக்கும். 
சத்யராஜை கதாநாயகனாக வைத்து படம் பண்ண இருப்பதாகக் கூறி சாலிகிராமம் பிரசாத் லேப் எதிரே என்னை ஓரிரவு நிற்க வைத்து 2.30 மணி நேரம் தர்மா என்கிற கதையைக் காட்சிகளுடன் மிக அழகாக விவரித்தான். இரவு 11 மணியை தாண்டியிருந்தது. ஆகா எத்தனை பெரிய திறமைசாலி என வியந்து போனேன்.
பகலில் அறையில் அமர்ந்து சிகரெட் புகைத்தபடி குண்டு குண்டான அழகான கையெழுத்தில் கதையை எழுதிக்கொண்டேயிருப்பான்.
சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் ஏதாவது ஒரு டீக்கடையில், மதுவிடுதியில் யாரையாவது ஒரு புதிய நபரை நிறுத்தி கதை சொல்லியபடியேயிருப்பான்.
காலம் உருண்டோடியது.
கதை சொல்ல உச்சி வெயிலில் தீராத சாலையில்  எங்கெங்கோ வேகவேகமாக சென்று கொண்டிருப்பான். 
தமிழின் அத்தனை கதாநாயகர்களுக்கும் அவனிடம் கதையிருந்தது. ஆனால் அழகான ஒரு சந்திப்பு அவனுக்கு நிகழவேயில்லை.
சாலையை நான் கடக்கும் பொதெல்லாம் கண்ணில் பட்டு  "ஒரு கமர்சியல் படம் எடு பாலா விட்டுறாத" என்று அறிவுரை வழங்குவான்.
இயக்குநராகும் கதவுகள் தொடர்ந்து அவனுக்கு அடைக்கப்பட்டு கொண்டேயிருந்தன.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட யோகிபாபுவை வைத்து படம் இயக்கப்போவதாக அலைபேசியில் அழைத்தான்.

கனவு நிறையேறாத பயணம் முற்றுப் பெற்றது கனவுகள் தினவேறிய சாலையில்.....
இன்றும் பார்க்கலாம் சாலிகிராமம் தேநீர்கடைகளில் யாராவது ஒருவர் யாரிடமாவது திரைக்கதையை சொல்லிக் கொண்டிருப்பார்கள் பாலுவின் ஜாடையோடு.....

என தெரிவித்துள்ளார். கதாசிரியர் பாலகுமாரனின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. மேலும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பாலகுமரனின் மறைவிற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.