தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி வரும் திரைப்படங்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி ஆர்வம் உண்டு. கபடியை மையப்படுத்திய வெண்ணிலா கபடி குழு, கிரிக்கெட்டை மையப்படுத்திய ஜீவா, குத்துச் சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இறுதிச்சுற்று & சார்பட்டா பரம்பரை, கால்பந்தாட்டத்தில் மையப்படுத்தி வெளிவந்த பிகில் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

அந்த வகையில் ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்தி தயாராகியுள்ள திரைப்படம் தான் சஞ்சீவன். தென்னிந்தியாவில் முதல் ஸ்னூக்கர் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படமாக பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் சஞ்சீவன் திரைப்படம் தயாராகியுள்ளது. 

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சஞ்ஜீவன் படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள சஞ்ஜீவன் படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். 

சஞ்ஜீவன் படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார்.காதல், காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய திரைப்படமாக சஞ்சீவன் திரைப்படம் தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சஞ்சீவன் திரைப்படம் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகவுள்ளது.