கடந்த ஆண்டு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு பெரிதும் பாராட்டுக்களைக் குவித்தது. துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வயகாம் 18 நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். ரசிகர்களும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பை தந்தனர். யாரும் எதிர்பார்க்காத கதைக்களம், புதுமை நிறைந்த ஸ்கிரிப்ட் பாணி என விருந்தளித்திருப்பார் இயக்குனர் தேசிங்.

இதில், கொள்ளையடிக்கும் பெண்ணாக ரக்‌ஷன் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார் நடிகை நிரஞ்சனி அகத்தியன். இவர், அஜித் நடிப்பில் தேசிய விருது குவித்த காதல் கோட்டை படத்தின் இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் என்பது  குறிப்பிடத்தக்கது. இவரின் மூத்த மகள் கிருத்திகா, இரண்டாவது மகள் நடிகை விஜயலட்சுமி, மூன்றாவது மகள் நடிகை நிரஞ்சனி.

நிரஞ்சனி தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைய உள்ளார். இயக்குநர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்யவுள்ளார் நிரஞ்சனி. இத்தகவலை, நிரஞ்சனியின் அக்கா கணவர் இயக்குனர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். நடிகை விஜயலக்ஷ்மியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

திருமண பந்தத்தில் நுழையும் இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் திரை ரசிகர்கள். அதுமட்டுமல்லாமல் படத்தில் நடித்த ஹீரோயினையே கரம் பிடிக்க போறீங்க... கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ? .... திருமணம் தான் என்று பதிவு செய்து வாழ்த்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.