இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராகவும், தொடர்ந்து பல பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராகவும் திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ஜென்டில்மேன். ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து பிரபுதேவா நடிப்பில் காதலன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தனது 2வது படமாக இயக்கினார். ஜென்டில்மேன் & காதலன் என இரண்டு திரைப்படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ட்ரெண்டாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

திரையுலகில் தனக்கென தனி பாணியில் பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்துவரும் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் ஜென்டில்மேன், காதலன், ரட்சகன் உட்பட பல திரைப்படங்களை தயாரித்தார். இந்த வரிசையில் தற்போது மீண்டும் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், ஜென்டில்மேன் 2 படத்திற்கு பாகுபலி, RRR படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் பிரபல மலையாள நடிகைகளான நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் பிரியா லால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் இயக்குனர் யாரென்ற அறிவிப்பு வெளியானது. முன்னதாக நானி மற்றும் வாணி கபூர் இணைந்து நடித்த ஆஹா கல்யாணம் படத்தை இயக்கிய A.கோகுல் கிருஷ்ணா ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.