“சினிமாவில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகர் விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள்” என்று, மதுரை ஆதீனம் தடாலடியாக தெரிவித்துள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக நடிகர் விஜயை சுற்றி பல்வேறு விதமான அரசியல் சர்ச்சை பேச்சுகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம், நடிகர் விஜயின் முழு பெயர் “ஜோசப் விஜய்” என்கிற ஒரு கருத்தும் சொல்லப்படுவது. இதுவும் மறுப்பதற்கு இல்லை.

இந்த நிலையில் தான், “இந்துக்களை அவமதித்துவிட்டார் நடிகர் விஜய், அவரது படங்களை பார்க்காதீர்கள்” என்று, புயலை கிளப்பி விட்டிருக்கிறார் மதுரை ஆதீனம்.

அதாவது, விசுவ இந்து பரிஷத்தின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பிலான மாநிலம் தழுவிய துறவியர் மாநாடு, மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

அதன்படி, மதுரை பழங்காநத்தம் பகுதியில் இதன் நிறைவு விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், பேரூர் ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். 

அந்த தருணத்தில் இந்த மாநாட்டில் உரையாற்றிய மதுரை ஆதீனம், “தற்போது பாரதியார் இருந்திருந்தால், செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடி இருப்பார்” என்று, தமிழக அரசை விமர்சனம் செய்தார். 

அதன் தொடர்ச்சியாக, “மதுக்கடைகள் ஆதிக்க அதிகரித்து இருக்கிறது என்றும், அரசியல் கோயில்களிலும் புகுந்து விட்டது என்றும்,  ஆன்மீகவாதிகள் ஆரசியல் பேசக் கூடாது என சொல்கிறார்கள் என்றும், நாங்கள் ஏன் அரசியல் பேசக்கூடாது? என்றும், நாங்கள் பேசாமல் வேறு யார் பேசுவது?” என்றும், அவர் அடுக்காடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அத்துடன், “கோயில் சொத்துக்கள் தொலைந்துபோகின்றன என்றும், தமிழ்நாட்டின் பண்பாடும் கலாச்சாரமும் கோயில்களுக்குள்தான் இருக்கிறது என்றும், அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை உள்ளது? என்றும், அவர் இன்னும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

குறிப்பாக, “திரைப்படத்தில் இந்துக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகர் விஜயின் படங்களை யாரும் பார்க்காதீர்கள்” என்று, ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார். 

குறிப்பாக, “கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்ப்பதன் காரணமாக, என்னை சங்கி என்று சொல்கிறார்கள்” என்றும், அவர் கூறினார்.

“சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும் என்று கூறிய சு.வெங்கடேசன், ஒருவாரம் என்னுடன் இருந்திருந்தால் சுருண்டு விடுவார்” என்றும், அவர் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனையும் விமர்சனம் செய்தார்.

முக்கியமாக, “சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் அதே நேரம், தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் ஏன் தூக்கக்கூடாது?" என்றும், சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களையும், வம்புக்கு இழுத்து தடாலடியாக மதுரை ஆதீனம் பேசியது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.