“பாஜக மதவெறியர்களின் தவறுக்கு, இந்திய அரசு ஏன் உலக அரங்கில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி உள்ள இந்திய தலைவர்கள் பலரும், “வெறுப்புணர்வை உள்நாட்டிலேயே வளர்த்த காரணத்தால், முதலில் பாஜக தான், இந்தியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளனர்.

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்த அவதூறான கருத்துக்கள் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் பெரும் கலவரம் வெடித்ததுடன், ஈரான், கத்தார் மற்றும் குவைத் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டு உள்ளன. 

இதுதொடா்பாக கத்தாா் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய தூதா் தீபக் மிட்டல் விளக்கமளித்தபோது, “அந்தப் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல என்றும், அந்தக் கருத்துகள் விஷம சக்திகளின் கருத்துகள்” என்றும், அவர் பாஜகவைச் சேர்ந்தவர்களை பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சால் இந்திய பொருட்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டதுடன், சவூதியில் வேலை பார்த்து வந்த பல இந்தியர்களும் தற்போது வேலையை விட்டு நீக்கப்பட்டு, இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. 

அதே நேரத்தில், நபிகள் குறித்து அவதூறான பேச்சுக்கு “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, உலகில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் போர்கொடி தூக்கி இருக்கின்றன.

இந்த நிலையில் தான், இது குறித்து பேசி உள்ள தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ், பாஜகவை மிக கடுமையாக சாடியிருக்கிறார்.

அதில், “பிரதமர் மோடி, பாஜக மத வெறியர்களின் வெறுப்பு பேச்சுகளுக்காக ஒரு நாடாக இந்தியா ஏன் சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி, “இந்த சர்ச்சைக்கு பாஜக தான் மன்னிப்பு கேட்க வேண்டு” என்று, வாதிட்டு உள்ளார்.

“ஒரு தேசமாக இந்தியா அல்ல” என்று, விமர்சித்த அவர், “நாளுக்கு நாள் வெறுப்பைக் கக்கி வரும் பாஜகவினர் தான் இந்தியர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றும், வற்புறுத்தி உள்ளார். 

மேலும், “பிரதமர் மோடி அவர்களே, பாஜக எம்.பி. பிரக்யா சிங் மகாத்மா காந்தியின் படுகொலையைப் பாராட்டிய போதே உங்கள் மௌனம் அதிர்ச்சியளிப்பதாகவும் இருந்தது என்றும், நீங்கள் எதை அனுமதிக்கிறீர்களோ அதையே நீங்கள் விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்” என்றும், கடுயைமாக விமர்சித்து உள்ளார். 

அத்துடன், “உங்கள் கட்சி மேலிடத்தின் மறைமுகமான ஆதரவுதான் நாட்டில் மத வெறியையும், வெறுப்பையும் தூண்டியது, இது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என்றும், அவர் டிவீட் செய்து உள்ளார்.

அதே போல், இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறியுள்ள கருத்தில், “இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டிய எந்தத் தவற்றையும் செய்யவில்லை என்றும், மாறாக பாஜக செய்த மாபெரும் தவறுக்கு, நம் இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?” என்றும், அவர் பாஜகவைப் பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.

“பிரதமருக்கு கத்தார் மற்றும் குவைத் தனது ராஜ் தர்மத்தை நினைவுபடுத்துகின்றன என்றும், இதை விட வெட்கக்கேடானது என்ன? என்றும், பிரதமரே உங்களால் நம் நாட்டிற்கு அவமானம் என்றும், எனவே நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், அவர் மிக கடுமையாக சாடி உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இது குறித்து தெரிவித்துள்ள டிவிட்டர் பதிவில், “இந்த விஷயத்தில் பாஜகவும் தனது நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை சஸ்பெண்ட் செய்வதும், டிஸ்மிஸ் செய்வதும் மட்டும் பலன் தராது என்றும், மிக  கடுமையான சட்டங்களின் கீழ் அவர்களை தண்டித்து சிறைக்கு அனுப்ப வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

அதே போல், இந்த விவகாரத்தில் பீகாரில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்திய பாரதிய தலைமையிலான பாஜகவை மிகக் கடுமையாகச் சாடி உள்ளார். அதில், “இந்தியா இப்போது உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்வதாக” மிக கடுமையாகவே அவர் பாஜகவை விமர்சித்து உள்ளார்.

அத்துடன், “நம் நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை சிக்கல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சாடி உள்ள அவர், இதற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும்” என்றும், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.

முக்கியமாக, பீகாரில் இப்போது நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ - பாஜக இடையேயான கூட்டணி அரசு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தற்போது என்ன தான் கூட்டணி ஆட்சி என்றாலும் கூட, பாஜகவை லாலு பிரசாத் யாதவ் மிக கடுமையாக விமர்சித்து உள்ளது, தேசிய அரசியலில் பேசும் பொருளாக மாறி உள்ளது.