இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 67 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தளபதி67 திரைப்படத்தின் படப்பூஜை நடைபெற்றுள்ளதால் அடுத்தடுத்த அறிவிப்புகள் ஜனவரியில் வாரிசு படத்தின் ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வெளியிடும் வாரிசு படம் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகும் அதே தினத்தில் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இந்த பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இடையே எத்தனை திரையரங்குகள் ஒதுக்கப்படும் எனும் பங்கீடு குறித்து பல செய்திகள் சோசியல் மீடியாவில் பரவி வருகின்றன.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் துணிவு படத்தை வெளியிடுவதால் துணிவு படத்திற்கு வாரிசு படத்தை விட அதிகமான திரையரங்குகள் தமிழகத்தில் கிடைக்கும் என தற்போது தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் சமீபத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இரண்டு திரைப்படங்களுக்கும் சரி சமமாக தியேட்டர்கள் பகிர்ந்து வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய வாரிசு படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு அவர்கள், "தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் நடிகர்! அவரது வாரிசு திரைப்படத்திற்கு தான் அதிகமான திரையரங்குகள் கிடைக்க வேண்டும்… இது பற்றி பேச உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்திக்க இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். எனவே இந்த பங்கீடு குறித்த இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.