ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது அடுத்த ஆண்டு (2023) பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித் குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக (ஜனவரி 12)ஒரே நாளில் ரிலீஸாகின்றன.

முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடியபல்லி இயக்கத்தின் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமன்.S இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்து விட்டன.

இந்நிலையில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் வாரிசு திரைப்படத்தில் இணைந்தது குறித்தும் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், “முன்னதாக கடந்த 202-ல் அஜித்குமாரின் துணிவு படத்திற்காக தான் எனக்கு முதல் முறை அழைப்பு வந்தது. பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஜித்குமார் அவர்களை நேரில் சந்தித்து வந்தேன். இருப்பினும் அந்த கதாபாத்திரம் இன்னும் வயதான ஒரு நபர் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் என்பதால் அந்த கதாபாத்திரம் கிடைக்காமல் போனது. பின்னர் திடீரென ஒரு நாள் தளபதி விஜயின் வாரிசு படக்குழுவிடமிருந்து அழைப்பு வந்தது. முக்கியமான கதாபாத்திரமும் கிடைத்தது. இது முழுக்க முழுக்க எனது பெண் குழந்தையான சமைராவின் பிரார்த்தனைகள் தான். எங்கள் வீட்டில் அனைவருக்கும் தளபதி விஜய் அவர்களை மிகவும் பிடித்திருந்தாலும் தீவிர ரசிகை என்றால் அது என் பெண் தான். தளபதி விஜயுடன் இணைந்து நடிக்கிறேன் என உறுதியான உடன் முதல் ஆளாக அவளிடமே சென்று விஜய் அங்கிள் உடன் நடிக்கிறேன் என தெரிவித்தேன்” என கணேஷ் வெங்கட்ராமன் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமனின் முழு பேட்டி இதோ…