தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாக நடித்து இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான அண்ணாத்த பக்கா எமோஷனல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தை பற்றியும் இயக்குனர் சிவா பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் Hoote App-ல் மனம் திறந்து பேசி 2 ஆடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், 

கபாலி மற்றும் காலா திரைப்படங்களுக்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டைலான கதாபாத்திரத்தில் நடித்த பேட்ட எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பேட்ட படத்துடன் இணைந்து அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது. 

என்னுடைய நண்பரும் விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்களிடம் விசாரித்து விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்தேன். படத்தின் இறுதியில் என்னை அறியாமல் நான் கை தட்டினேன். எனவே இயக்குனர் சிவாவை சந்தித்து வாழ்த்து கூற வேண்டுமென தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் சிவாவை சந்தித்த முதல் சந்திப்பில் அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தை போன்ற அவரது சுபாவமும் அவரது பேச்சில் இருந்த நேர்மையும் உண்மையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருடன் பணியாற்ற விரும்பினேன். பின்னர் அண்ணாத்த திரைப்படத்தின் கதையை சிவா என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டு முடிக்கும் தருவாயில் நான் கண்கலங்கி விட்டேன். 

தற்போது படமும் ரிலீசாகி குழந்தைகள் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாக அனைவரும் ரசித்து வருகிறார்கள். அண்ணாத்த படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். . அண்ணாத்த என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திரைப்படம். அண்ணாத்த படப்பிடிப்பின்போது நடைபெற்ற பல சுவாரசியமான விஷயங்களை இனி வரும் நாட்களில் உங்களோடு இந்த Hoote App வழியே பகிர்ந்து கொள்கிறேன்

என தெரிவித்துள்ளார். ட்ரண்டாகும் சூப்பர்ஸ்டாரின் பதிவு இதோ…