மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் மற்றும் அநீதிகள் கொண்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து நடித்துள்ளார்.

ஒட்டு மொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தை பார்வையிட்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பட குழுவினரையும் சூர்யாவையும் வெகுவாக பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் நடிகர் சூர்யா இருளர் பழங்குடி இன மக்களின் கல்வி நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து லிஜோமொள் ஜோஸ்,மணிகண்டன், பிரகாஷ் ராஜ், ராஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்து நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

IMDb-ல் 9.6 புள்ளிகளோடு, உலக அளவிலான IMDb மதிப்பீட்டு பட்டியலில் ஜெய்பீம் முதலிடத்தைப் பிடித்துள்ளது . முன்னதாக இந்த பட்டியலின் டாப் 10 வரிசையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் 3-வது இடத்தை பிடித்த நிலையில், The Shawshank Redemption  மற்றும் தி காட் ஃபாதர் படங்களை பின்னுக்கு தள்ளி ஜெய்பீம் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

9.1 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் சூரரைப்போற்று படம் உள்ளது. மேலும் சூர்யாவின் ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று திரைப்படங்கள் மட்டும்தான் உலக அளவில் IMDb பட்டியலில் டாப் 10 வரிசையில் உள்ள இந்தியத் திரைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.