கோலிவுட்டின் இளம் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அதர்வா. முன்னணி நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், தனது திரைப்பயணத்தில் அயராத உழைப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக வளர்ந்துள்ளார். குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம். கடைசியாக 2019-ல் இவர் நடித்த 100 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் நடித்த வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். 

இந்நிலையில் அதர்வாவின் அடுத்த படமான தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2021-ல் திரைக்கு வரவிருக்கிறது. திரையரங்கில் ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி படம் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலில் உள்ளனர் சினிமா ரசிகர்கள். ஜனவரி மாதம் சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். 

தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காகும். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், ஜெகன், காலி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கினார்களாம். 

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் ஆர்கே செல்வா எடிட்டிங் செய்கிறார். படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

கடந்த வாரம் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் படத்தின் டீஸர் வெளியானது. வரிசையாக படங்கள் வைத்திருக்கும் அதர்வாவிற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.